May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புரட்டாசி மாதமும் பெருமாளின் சிறப்புகளும்!

(திருப்பதி பிரமோற்சவம் ‪19.9.2020‬- ‪27.9.2020‬ )

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலேநெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே”

-(குலசேகராழ்வார்)

புரட்டாசி மாதம் தெய்வீக மணம் கமழும் மாதம், பெருமாளுக்கு சிறப்பான மாதம். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது நன்மை தரும். புரட்டாசி சனிக் கிழமைகளில் வழிபடுவது சிறப்பானதாகும்.

பெருமாள் கண்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த போது கம்சன் மாய அரக்கியை அனுப்பி கண்ணனை கொலை செய்ய எண்ணுகிறான். சனீஸ்வரன் தன் உக்கிர பார்வையால் அவளை சாம்பலாக்கி விடுகிறார். இக்கதையை மகாவிஷ்ணுவிடம் சனீஸ்வரன் நினைவூட்டுகிறார்.

அதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் தன்னை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று மகாவிஷ்ணு கூறினார். சனீஸ்வரனுக்கும் பெரும் வரம் அளித்தார். இதனால்தான் பெருமாள் வழிபாட்டில் சனிக்கிழமை முக்கிய இடம் பெறுகின்றது. ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்குபவர்களுக்கு சனி பகவானின் கெடுதல் குறையும்.

அடுத்து இந்த புரட்டாசி மாதம் தான் திருப்பதி பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. திருமலையில் நடைபெறும் திருவிழாக்களில் பிரமோற்சவம் தான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டின் பிரமோற்சவம் இம்மாதம் 19.6.2020 தொடங்கி ‪27.09.2020‬ வரை நடைபெறுகின்றது. திருமகளின் திருவருளைப் பெற்று உய்வதற்காக இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பிரம்மோற்சவத்தில் ஆண்டுதோறும் பங்கெடுப்பார்கள்.

இரண்டாவது பிரம்மோற்சவம் நவராத்திரி திருவிழாவாக ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 24ஆம் திகதி வரை நடைபெறும். திருமலை என்றும் திருப்பதி என்றும் கூறப்படும் பெருமானின் திருத்தலம் எப்பொழுதும் பக்தர்கள் நிறைந்ததாகவே காணப்படும். வெங்கடாசலபதி, ஏழுமலையான், பெருமாள் என்று பல நாமங்களை கொண்டு தலை வணங்கும் பக்தர்களுக்கு அருள் பொழிந்து கொண்டிருக்கிறார்.

திருப்பதி வெங்கடாசலபதியின் அற்புதங்கள் பல. ஆழ்வார்கள் பிரபந்தங்கள் பாடி முத்தி பெற்றுள்ளார்கள். திருப்பதி அற்புதங்களில் ஒரு அற்புதத்தை இங்கே காண்போம்.பீமன் என்றொரு குயவன் பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். மட்பாண்ட வேலைகள் செய்வதால் பெருமாளை சேவிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் பெருமாளை தினமும் சிந்தித்த வண்ணம் இருப்பான். ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை தரிசிக்க போக வேண்டும் என்று நினைப்பான் போக முடியாமல் வேலைகள் அதிகரித்துவிடும்.தான் போகாவிட்டாலும் பெருமாளை இங்கு அழைத்து வணங்குவோம் என்று நினைத்தான்.

பானை செய்வதற்கு பிசைந்த மண்ணில் கொஞ்சம் எடுத்து அம்மண்ணில் பெருமாளின் உருவத்தை வடிவமைத்தான். பெருமாள் என்னிடம் வந்து விட்டார் என்று மகிழ்ந்து அவருக்கு வழிபட தன்னிடம் ஒரு மலர் கூட இல்லையே என வருந்தினான். பிசைந்த மண்ணை எடுத்து அந்த மண்ணில் பூக்கள் செய்தான்.காய்ந்தபின் மண்ணில் செய்த மலர்களை பெருமாளுக்கு சாற்றி மகிழ்ந்தான்.தொண்டைமான் என்னும் அரசன் திருப்பதி பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் சென்று வணங்கி தங்கத்தில் மாலை செய்வித்து சாற்றி வழிபட்டு வந்தார்.

ஒரு நாள் ஆலயத்திற்கு சென்ற பொழுது பெருமாளின் கழுத்தில் அவர் தங்க மாலையை காணவில்லை. களிமண்ணில் செய்த மலர்மாலை இருப்பதைக்கண்டு திகைத்தார். அர்ச்சகர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் எதுவும் பேசாமல் சென்று விட்டார். அன்றிரவு அவர் கனவில் பெருமாள் தோன்றினார். “மன்னா வருந்தாதே, எனது பக்தன் ஒருவன் சாற்றிய மண்ணினால் செய்த மாலையை அணிந்து கொண்டேன். நீ அந்த குயவனிடம் சென்று அவனுக்கு உதவி செய். அவன் வறுமையால் வாடுகின்றான்” என்று கூறிவிட்டு மறைந்தார்.

அரசனும் மறுநாள் காலை அவன் வீட்டிற்கு சென்று அவனது பக்தியை மெச்சி பாராட்டினார். என்னைவிட பக்தியில் சிறந்தவன் நீதான் என்று கூறி அவனுக்கு பொன்னும் பொருளும் வழங்கிச் சென்றார். அன்றிலிருந்து இன்றுவரை திருப்பதி பெருமாளுக்கு மண்சட்டியில் தான் நைவேத்தியம் வைக்கப்படுகிறது. இறைவனின் விருப்பமும் அதுவாகவே கருதப்படுகிறது. பெருமாள் மண்சட்டியில் நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறார் என்றால் குயவனிடம் அவர் வைத்த பக்தி நிலையை நாம் உணர்வோமாக.

திருப்பல்லாண்டு

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்செவ்வடி செவ்வி திருக்காப்பு”

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டுவடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டுபடைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.

-தமிழ்வாணி (பிரான்ஸ்)