-ஆலய பரிபாலன சபை
விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம்.
நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம்.
எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்?
வவுனியா மாவட்டத்தின், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற நெடுங்கேணி எனும் அழகிய விவசாய சிறுநகரின் எல்லைக்கிராமமான பாலமோட்டை – ஒலுமடு கிராமங்களுக்கு அரண்செய்யும் அடர்வனத்துள் எழுந்தருளப்பெற்றிருக்கிறார் அடிமுடி அறியமுடியாத ஆதிலிங்கேஸ்வரர்.
ஏ-9 சாலையின் இடையே புளியங்குளம் சந்தியில் இறங்கி, முல்லைத்தீவு சாலையில் 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது நெடுங்கேணி.
அவ்விடத்தில் இறங்கி யாரைக்கேட்டாலும் ஆதியருளான் வழிசொல்வார்கள்.
என்ன சிறப்பு?
பாலமோட்டை கிராம எல்லையில் ஆரம்பிக்கிறது அடர்வனம். அதற்குள்ளால் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும், உழவு இயந்திரத்தின் உதவியுடனும் அடியவர்கள் வனத்தின் வாசனையை – வனத்தின் இசையை நுகர்ந்து சென்றால் இரண்டரை கிலோமீட்டர் முடிவில் நாகவடிவில் நிமிர்ந்து நிற்கிறது வெடுக்குநாறி மலை.
நாகவடிவ குகைவனைவுக்குள் அமர்ந்திருந்தபடி அனைத்து அடியவர்களையும் வரவேற்கிறார் விநாயகப் பெருமான்.
அவரைத் தரிசித்துவிட்டு, சற்றுத் தள்ளிநடந்தால் தொன்மைக்கால கேணியில் மனம் நனைக்கலாம். அதிலிருந்து வான் நோக்கி நெடிதாக வளர்ந்த மலையின் உச்சியில் பீடம் அமைத்து எழுந்தருளியிருக்கிறார் ஆதிலிங்கேஸ்வரர்.
ஏணியின் உதவியோடும், சக அடியவர்களின் கைகோர்ப்புடனும் மலையுச்சியை அடைவது மிக இலகு. ஒரு மைதானம் போல சமதரையாக இருக்கும் மலையின் மேற்தட்டில் நின்றால் நாம் நடந்து வந்த காடு புற்களாகத் தெரியும்.
நம் முழுநிலத்தையும் சுற்றி ஒரு வட்டமடிப்புப் பார்வையில் முடித்துவிடலாம். நம் முழுநிலத்தையும் ஒரே சுற்றில் பார்த்துவிடும் அருளை ஆதிலிங்கேஸ்வரர் தருகிறார்.
வெடுக்குநாறி மலையில் இருக்கும் தொன்ம எச்சங்கள் காலக்கணிப்புக்கு அப்பாலானவை. மிக நீளமான ஆதித் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பும், வனையப்பட்ட குகையும் நம் வரலாறு குறித்த ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. ஆராயத்தூண்டுபவை.
தன்னை நோக்கி வரும் அடியவர்களுக்கு அருள்பாலிப்பையும், வரலாற்றையும், அதுதொடர்பான பயபக்தியையும்தான் ஆதிலிங்கேஸ்வரர் ஏற்படுத்துகிறார். இவ்வளவு பெருகடாட்சங்களையும் மெய்யுணர்வால் அனுபவித்துச் செல்ல வாருங்கள். திரண்டு வாருங்கள்.
எதிர்வரும் 26 ஆம் நாள் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் 108 பானை சிறப்புப் பொங்கல் வழிபாடுகளிலும் அடியவர்களாகிய உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
கடந்த பல வருடங்களாகவே போராடிப்போராடி தளைவென்று மலையுச்சியில் நிமிர்ந்துநிற்கும் ஆதியான லிங்கேஸ்வரனைத் தரிசித்துச் செல்லுங்கள்.மெய்யருள் பெற்று துயர் நீங்கிச் செல்லுங்கள்.
ஆலய பரிபாலன சபை
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம்
வவுனியா
இலங்கை
(படங்கள்: நன்றி-வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் முகநூல்)