January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்சியாளராக யூனுஸ் கான்

(Photo: Younus Khan/Facebook)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவரும், ஓய்வுபெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான யூனுஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யூனுஸ் கான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுநராக நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வாசிம் கான் கூறியுள்ளார். இந்த நியமனம் 2022 ஆம் ஆண்டு இருபது 20 உலகக் கிண்ணம் வரை தொடரவுள்ளது.

ஏற்கனவே யூனுஸ் கான் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு மாத்திரம் பாகிஸ்தான் அணியின் தற்காலிக துடுப்பாட்ட பயிற்றுநராக  செயற்பட்டிருந்தார்.

இந்தத் தொடரில் அவரது சிறந்த பயிற்றுவிப்பின் காரணமாக பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களின் ஆற்றல்கள் மேம்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

அதனைக் கருத்திற்கொண்டே யூனுஸ் கானை அடுத்த இரண்டு வருடங்களுக்கு அந்தப் பொறுப்பில் நீடிக்கச் செய்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரில் யூனுஸ் கான் தனது துடுப்பாட்ட பயிற்றுநர் பணியை ஆரம்பிக்கவுள்ளார்.

மேலும் “இந்த நியமனம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என யூனுஸ் கான் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அதுவரை பாகிஸ்தானில் உள்ளூர் போட்டிகளை அவதானித்து அதிலிருந்து இளம் துடுப்பாட்ட வீரர்களை தெரிவுசெய்து அவர்களின் திறமையை விருத்தி செய்யும் பணிகளிலும் ஈடுபடவுள்ளதாக யூனுஸ் கான் குறிப்பிட்டுள்ளார்.

42 வயதான யூனுஸ் கான் 118 டெஸ்ட், 265 சர்வதேச ஒருநாள், 25 சர்வதேச இருபது 20 போட்டிகளில் பாகிஸ்தான் சார்பாக விளையாடிய வீரராவார்.