January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விக்கினங்கள் தீர்க்கும் ‘விநாயகர் சதுர்த்தி’

விக்கினங்களை தீர்க்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளான ‘விநாயகர் சதுர்த்தி’ இன்றாகும்.

விநாயகர் சதுர்த்தியானது ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.

மாதந்தோறும் விநாயகர் சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகின்ற விநாயகர் சதுர்த்தியானது, தனிச்சிறப்பு வாய்ந்தது என இதிகாசங்கள் கூறுகின்றன.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல உணவுகளை படைத்து வழிபடுவது வழக்கம். வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பர்.

விநாயக வழிபாடு எம்மிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. இறை வணக்கத்திற்கு உள்ளத்தை ஒரு முகப்படுத்துவதற்கு முதல் வணக்கமாக விநாயக வணக்கத்தைச் செய்கிறோம்.

இவர் பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் தனக்கு மேலான ஒரு தலைவன் இல்லாதவன் எனப் பொருள்படும் ‘விநாயகன்’ என்பது நன்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எக்காரியத்தை எவர் செயினும் அதற்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நீக்கும் வண்ணம் முதலில் விநாயகரே வணங்கப்படுகிறார்.

விநாயகப் பெருமானின் பெருமைகளையும் உயிர்களிடத்து அவர் கொண்டுள்ள இயல்பான அன்பு பற்றியும் இதிகாச புராணங்களிலும் தோத்திரப்பாடல்களிலும் காணப்படுகின்றன.

வேதங்களின் சாரமாகவும் முடிவாகவுள்ள பிரணவத்தின் வடிவமாகவும் விநாயகப் பெருமான் விளங்குகிறார். இவர் அறிவுத்தெய்வமாகவும் விளங்குகின்றார்.

இவர் ஞான வடிவுடையவர், திருமூலர் இவரை ஞானக்கொழுந்து எனக்குறிப்பிடுகிறார்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

எந்தக்காரியம் செய்யத்தொடங்கும் முன்பும் இடையூறின்றி அந்தக்காரியம் நிறைவேறுவதற்கு விநாயக வழிபாடு இன்றியமையாதது.

மனிதரும் முனிவரும் தேவர்களும் விநாயகருக்கு பூஜை செய்து விட்டுத்தான் எதனையும் ஆரம்பிப்பார்கள்.

இதர கடவுளரும் இவரை வழிபட்டே விக்கினங்களைத் தீர்த்துக்கொண்டதாக புராணங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.

இப்படியான விநாயகரை எவரும் வழிபாடு செய்து அருளைப் பெறலாம். இவரை வேத ஆகம முறைப்படி மட்டுமன்றி அதற்குப்புறம்பான எளிமையான வழிபாட்டு முறையினாலும் வழிபட்டு உய்தி பெறலாம்.

அந்த வகையில் இன்று இந்துக்கள் விநாயகப் பெருமான் அவதரித்த ‘விநாயகர் சதுர்த்தி’ நாளை கொண்டாடுகின்றனர்.

தமிழகத்தில் இது சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையிலும் விநாயகர் சதுர்த்தி வீடுகளிலும், ஆலயங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றன.