November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெற்றிகளை அள்ளித்தரும் ‘விஜயதசமி’ திருநாள்

‘விஜய’ என்றால் வெற்றி அதனால் இன்றைய விஜய தசமி வெற்றிக்குரிய நாளாக கருதப்படுகிறது.

விஜய தசமி பூஜையானது எல்லா தரப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஒருவருக்கொருவர் பக்தியுடன் கொண்டாடும் பூஜையாகவுள்ளது.

நவராத்திரியில் ஒன்பது நாள் விரதமிருந்து கொண்டாடும் தன் பக்தர்களுக்கு ஸ்ரீ துர்க்கா தேவி, விஜய தசமி அன்று அருள் பொழிகிறாள்.

புராணக் கதை

விஜய தசமி என்பது அன்னை துர்க்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்த வெற்றி (விஜய) திருநாள் (தசமி) ஆகும்.

புராணக் காலத்தில் (மஹி – எருமை) அதாவது மஹிஷாசுரன் என்ற எருமை தலை கொண்ட அரக்கன் வாழ்ந்து வந்தான். மனிதர்கள், கடவுள் இப்படி யாராலும் அழிக்க முடியாத வரத்தை பெற்று உலக மக்கள் அனைவரையும் கொடுமையில் ஆழ்த்தினான்.

அசுரனின் இச் செயல்களால் மூவுலகமே நிம்மதியற்ற நிலையில் அன்னை துர்க்கா தேவியை வழிபட்டனர். அன்னை துர்க்கா தேவியும் அந்த அரக்கனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் பத்து கைகளுடன் மனிதரும் அல்லாத ஒரு அமைப்பை எடுத்து அவனை வதம் செய்து உலகில் நிம்மதியை நிலை நிறுத்திய நன்னாளே இந்த விஜய தசமி நாளாகும்.

இதன்படி நவராத்திரியின் பத்தாம் நாள் தசமி. விஜய தசமி என சொல்வார்கள். அன்று பாடசாலைகள், பள்ளிக்கூடங்களில் சரஸ்வதி பூசை சிறப்பாக நடைபெறும்.

மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெறும். அன்று பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் வித்யாரம்பம் நடைபெறும்.

இந்நாளில் கலைகள் ஆரம்பிப்பது புதிய தொழில் ஆரம்பித்தல் என்பவற்றை செய்தால் வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

கன்னி வாழை வெட்டல்

விஜயதசமி தினத்தன்று மாலை ஆலயங்களில் கன்னி வாழை வெட்டல் அல்லது மானம்புத் திருவிழா நடக்கும்.

அன்று அம்பாளுக்கு விசேட பூசைகள் நடைபெறும்.

அம்பிகையை அலங்கரித்து வீதி வலம் கொண்டு வந்து மகிஷாசுரவதம் நிகழ்த்தப்படும்.
ஒரு வன்னி மரத்தை நட்டு அதை அசுரனாக பாவித்து அந்த மரத்தை வெட்டி துண்டிக்கும் பாவனை காட்டப்படும்.

வன்னி மரம் இல்லாத இடத்தில் வாழை மரத்தை நட்டு அதை வெட்டி மகிஷாசுரனை வதம் செய்வதாகக் காட்டப்படும்.

மகிஷாசுரனை வதம் செய்ததால் அம்பிகை மகிஷாசுரவர்த்தினி என்ற பெயரையும் பெற்றாள்.

இந்த மகிஷாசுர வதம் சகல ஆன்மாக்களும் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டு சுகம் அடைவதைக் காட்டப்படுகிறது.

எனவே அனைவரும் எம்மில் இருக்கும் ஆணவத்தைப் போக்கி அன்பும் கருணையும் உள்ளவர்களாக இறை பக்தியுடன் வாழ்வதை நவராத்திரி விரதம் எடுத்துக் காட்டுகிறது.

வையத்துள் வாழ்கின்ற மக்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ்ந்து நலம் பெற வேண்டும் என அம்பிகையை பிரார்த்திப்போமாக….

மலைமகள் அலைமகள் கலைமகள்
அருள் அனைவருக்கும் கிடைப்பதாக
அம்பிகையைச் சரண் புகுந்தால்
அதிக வரம் பெறலாம்.