November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அம்பாளைப் போற்றும் ஆடிப்பூரத்தின் சிறப்புக்கள்!

நட்சத்திரங்கள் 27, இதில் பதினோராவது நட்சத்திரம் ‘பூரம்’ என்னும் நட்சத்திரமாகும்.

12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாகும்.

சிவனுக்கு திருவாதிரை, திருமாலுக்கு திருவோணம் என்பது போல அம்பாளுக்கு ‘ஆடிப்பூரம்’ அதி விசேஷமான நாளாகக் கருதப்படுகின்றது.

ஆடி மாதம் தட்சிணாயன காலத் தொடக்க காலம், உத்தராயண காலம் சிவபெருமானை வழிபட உகந்த காலம் என்றால் சிவனின் வாம பாகத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகைக்கு வழிபட தட்சிணாயன காலம் மிக சிறப்பானதாகும்.

இதனால் தான் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, பூரம் என்னும் நாட்கள் அம்பிகைக்கு விசேடமாகக் கருதப்படுகின்றது.

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’ என்ற அடைமொழியோடு சிறப்புப் பெறுகிறது.

மானிடர்களின் துன்பங்களைப் போக்குவதற்காக உலக மாதாவாகிய உமாதேவி பூவுலகில் தோன்றிய நாளாக ‘ஆடிப்பூரம்’ கருதப்படுகிறது.

இந்நாளில் அன்னையாகிய அம்பிகை பூவுலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.

சைவ வைஷ்ணவ ஐக்கிய நாளாக இந்நாளை கருதலாம். சைவ சமயத்தில் உமாதேவியாரையும் வைஷ்ணவத்தில் ஆண்டாள் நாச்சியாரையும் இந்நாளில் எல்லோரும் வழிபடுவர்.

இதனால்தான் அம்பாளுக்கு ஆடிமாதம் புகழ்வாய்ந்த அருட்கடாட்சம் நிறைந்த மாதமாக கருதப்படுகின்றது.

வைஷ்ணவ வழிபாட்டில் பூமாதேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் குழந்தையாக தோன்றியதாக புராணம் கூறுகிறது.

ஆடிப்பூரத்தன்று பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆண்டாளின் அவதார தினம் பத்து நாட்கள் திருவிழாவாக விமர்சையாக வில்லிபுத்தூரில் கொண்டாடப்படுகிறது.

ஆண்டாள் பெருமாளே தனக்கு கணவராக கிடைக்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்து பெருமாளை வழிபட்டு வந்ததுடன் பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட ஆண்டாள் கிருஷ்ண பக்தியில் திளைத்தாள்.

பெரியாழ்வார் பெருமாளுக்கு நாள்தோறும் மாலை தொடுத்து வழிபட்டு வந்தார். ஆண்டாள் அவருக்குத் தெரியாமலேயே அவர் கட்டும் மாலையை தான் சூடி விட்டு எடுத்து வைத்து விடுவாள்.

பெரியாழ்வாரும் இச்சம்பவத்தை அறியாமல் மாலையை எடுத்துச் சென்று பெருமாளுக்கு சாற்றி விட்டு வருவார்.

ஒருநாள் அவர் கட்டிய மாலையை ஆண்டாள் சூடிக் கொண்டு நின்றதைக் கண்ட பெரியாழ்வார் சினம் கொண்டார்.

ஆண்டாளை ஏசினார். பெருமாளுக்கு சூடும் மாலையை இவள் இப்படி சூடி அசுத்தப்படுத்தி விட்டார் என்று மிகவும் வருந்தினார்.

அன்று அவர் கோவிலுக்கு செல்லவில்லை. அன்றிரவு அவரின் கனவில் பெருமாள் தோன்றி “நீ ஒவ்வொரு நாளும் ஆண்டாள் சூடிய மாலையையே எனக்கு சூட்டுக” என்று கூறி மறைந்தார்.

பெரியாழ்வார் திகைத்தார். ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு காலையில் மாலையைத் தொடுத்து எடுத்துச் சென்று இறைவனுக்கு சாற்றினார்.

பெருமானின் நினைவிலேயே வாழ்ந்த ஆண்டாள் அவரையே திருமணம் செய்வது என்று உறுதி பூண்டாள்.

இறைவனின் விருப்பப்படி பெரியாழ்வார் ஆண்டாளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை இறைவன் சூடியதால், “சூடிக்கொடுத்த சுடர்கொடியள்” என்ற பெயரை ஆண்டாள் பெற்றார். கோதை என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

இதனால் ஆண்டாளுக்கு ஆடிப் பூரம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆண்டாளை வணங்கினால் திருமணப் பேறு கிடைக்கும்.

வளைகாப்பு

உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அம்பிகைக்கு இந்நாளில் வளைகாப்பு வைபவம் நடைபெறும்.

இறைவன் பெண்ணுக்கு தாய்மை என்ற அந்தஸ்தை கொடுத்தான். அம்பிகைக்கு சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு சாற்றுவது வழக்கம்.

ஆனால் அம்பிகைக்கு ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு வைபவம் நடத்துவார்கள் பூப்பெய்த மாதமும் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.

திருமணம் செய்த பெண்கள் தாங்கள் தாய்மை அடைய வேண்டும் என்பதற்காக இந்நாளில் அம்பாள் ஆலயங்களுக்கு சென்று வளையல்கள் சாற்றி அம்பிகையை வழிபடுவர்.

இது நாளடைவில் தாய்மை அடைந்த பெண்களுக்கு ஐந்தாம் ஏழாம் மாதங்களில் வளைகாப்பு செய்து அவர்களை ஆசீர்வதிக்கின்றார்கள்.

சுக்கிரனின் அருள்

பூரம் நட்சத்திரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரமாகும். சுக்கிரனின் தெய்வம் ரங்கநாதர் பூர நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் அனைவரையும் நேசிப்பவர்கள்.

இனிமையாக பேசுபவர்கள், அதனால்தான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ரங்கநாதரையே மணந்தாள்.

இந்நாளில் விரதம் இருக்கும் தம்பதிகள் ஒற்றுமை, பிரிந்த தம்பதிகள் ஒற்றுமை, பகைவர்கள் நண்பராதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.

ஆடிப்பூரத்தில் சிறப்பை அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அந்தாதியில் ஒரு பாடலை காணலாம்..

திரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்
திரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்
திரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ
திரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே

(கந்தரந்தாதி)

இப்பாடலில் “புரத்து அப்புப் புவிதரத் தோன்றி” என்பது பூர நாளில் கடல் சூழ்ந்த உலகைப் படைப்பதற்காக தோன்றியவன் என்று அம்பிகையின் பூர நட்சத்திர அவதாரத்தை சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

“அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை எல்லாம்” என சிவஞானசித்தியார் கூறும் வரிகள், உழவர்களின் உழவுத் தொழில் முயற்சி வெற்றி பெற்று அவர்கள் விதைத்த பயிர் செழித்தோங்கி பெரும் பயன் தருமாறு அருள் செய்பவள் அம்பிகையாவாள் என்பதை உணர்த்துகிறது.

இப்படி ஆடிப்பூரம் மிகவும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. அம்பிகையின் அருளும் ஆண்டாள் நாச்சியாரின் அருளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

நோய்ப் பிணியின்றி நலமுடன் வாழ எல்லாம் வல்ல அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

-தமிழ்வாணி (பிரான்ஸ்)

(படங்கள்: நன்றி- ஸ்ரீ மயூராபதி ஸ்ரீ பத்திரிகாளி அம்பன் ஆலயம்)