(Twitter : Dawa Khan Menapal)
ஆப்கானிஸ்தானின் ஊடக மற்றும் தகவல் மையத்தின் இயக்குனர் தலிபான் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
தாவா கான் மேனாபால் தலைநகர் காபூலில் உள்ள தாருல் அமான் சாலையில் வைத்து துப்பாக்கி தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
“அவருடைய செயல்களுக்காக தண்டிக்கப்பட்டார்” என்று இவரின் கொலை தொடர்பில் தலிபான்கள் தெரிவித்தனர்.
காபூலில் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டைத் தாக்கிய சில நாட்கள் கடந்துள்ள நிலையில் மேனாபால் கொல்லப்பட்டுள்ளார்.
வெள்ளியன்று ஈரானின் எல்லையில் உள்ள நிம்ரோஸ் மாகாணத்தில் உள்ள நகரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக அரச வட்டாரங்கள் பிபிசியிடம் கூறியுள்ளது.
தேசிய பாதுகாப்பு இயக்குநர் அலுவலகத்தை சுற்றி இன்னும் சண்டை நடப்பதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளன. எனினும் இந்த அறிக்கைகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இவரின் கொலைக்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகளும் சர்வதேச பிரதிநிதிகளும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
“துரதிர்ஷ்டவசமாக, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகள் மீண்டும் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்து ஒரு தேசபக்தரான ஆப்கானிஸ்தானை கொன்றனர்” என்று உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மிர்வைஸ் ஸ்டானிக்ஜாய் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூரகத்தின் பொறுப்பாளர் ராஸ் வில்சன் இந்த கொலையில் “சோகமாகவும் வெறுப்பாகவும்” இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
“இந்த கொலைகள் ஆப்கானிஸ்தானின் மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகும்” எனவும் குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.