January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விநாயகர் வடிவம் உணர்த்தும் தத்துவம்

விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். அந்த வகையில் இன்று சங்கடஹர சதுர்த்தி விரத நாளாகும்.

இந்நாளில் விநாயகர் வடிவத்தின் தத்துவம் தொடர்பாக அறிந்துகொள்வோம்.

விநாயக வழிபாடு எம்மிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. இறை வணக்கத்திற்கு உள்ளத்தை ஒரு முகப்படுத்துவதற்கு முதல் வணக்கமாக விநாயக வணக்கத்தைச் செய்கிறோம்.

இவர் பல பெயர்களால் அழைக்கப்பட்டாலும் தனக்கு மேலான ஒரு தலைவன் இல்லாதவன் எனப் பொருள்படும் ‘விநாயகன்’ என்பது நன்கு குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் எக்காரியத்தை எவர் செயினும் அதற்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நீக்கும் வண்ணம் முதலில் விநாயகரே வணங்கப்படுகிறார்.

விநாயகப் பெருமானின் பெருமைகளையும் உயிர்களிடத்து அவர் கொண்டுள்ள இயல்பான அன்பு பற்றியும் இதிகாச புராணங்களிலும் தோத்திரப்பாடல்களிலும் காணப்படுகின்றன.

இவரது தோற்ற தத்துவத்தைப்பற்றி சிறிது சிந்திக்கலாம்.

வேதங்களின் சாரமாகவும் முடிவாகவுள்ள பிரணவத்தின் வடிவமாகவும் விநாயகப் பெருமான் விளங்குகிறார். இவர் அறிவுத்தெய்வமாகவும் விளங்குகின்றார்.

இவர் ஞான வடிவுடையவர், திருமூலர் இவரை ஞானக்கொழுந்து எனக்குறிப்பிடுகிறார்.

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

எனவே வித்தியாரம்பம் வேளைகளிலே பிள்ளையாருக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.

பிள்ளையார் சுழி என்னும் ‘உ’ எழுத்து நாத விந்துக்களின் வரி வடிவம். இது ஓங்கார வாக்கியராகிய விநாயகரது துதிக்கைப் போலாகும்.

இது பற்றி கணபதியை முதலில் வழிபடும் மரபை உலகம் கைக்கொண்டு அனுஷ்டித்து வருகிறது.
துதிக்கையுடன் கூடிய விநாயகரின் திருவுருவம் ஓங்காரத்தையே குறிக்கின்றது.

ஓங்காரத்திலுள்ள அகாரம், உகாரம், மகாரம், (அ,உ,ம) ஆகிய மூன்று ஒலிகளும் முறையே பிரம்மா விஷ்னு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளையும் குறிக்கும் என்பர். எனவே விநாயகன் மும்மூர்த்திகளின் வடிவமாகவே விளங்குகிறார்.

விநாயகப் பெருமானின் திருவுடம்பில் உலகிலுள்ள அனைத்தும் உள்ளன என்பர்.

ஆன்றோர், அதாவது, விநாயகருடைய திருமேனி- இடையின் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்துவரை தேவ உடம்பு, தலை மிருகத்தலை, ஒற்றைக்கொம்பு- ஆண்தன்மை, கொம்பில்லாத பகுதி- பெண் தன்மை, யானைத்தலை- அஃறினை, தெய்வ சரீரம்- உயர்தினை இவ்வாறு எல்லாம் ஆய திருவுருவம் விநாயகரது வடிவம்.

பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்தினையாய், அஃறினையாய் எல்லாமாய் விளங்குபவர் விநாயகர் என்பது நோக்காற்பாலது.

விநாயகர் தம்மை அடக்குபவர் ஒருவரும் இலர் என்ற குறிப்பை உணர்த்தும் பொருட்டு தமது திருக்கரங்களிலே பாசாங்குசத்தை ஏந்தியிருக்கிறார்.

விநாயகரது செவி தாழ்ந்த செவி, முறம் போன்றது. அகில உலகங்களும் அவருடைய மணி வயிற்றில் அடங்கிக்கிடப்பதை அவரது மத்தன வயிறு புலப்படுத்துகிறது.

அவரது உதரபாதம் பாம்பு. பாம்பு என்பது குண்டலினி சக்தியின் வடிவம் இந்த சக்தியே உடலெங்கும் வியாபித்தும் பரவுகிறது என்பது இதன் தத்துவம்.

விநாயகரது ஐந்து கரங்களிலும் அமைந்துள்ள பொருட்கள் ஐந்தொழில்களையே குறிகின்றன.

ஒரு கரத்தில் ஏந்தியுள்ள பாசம் படைத்தலையும், ஒற்றைக்கொம்பு காத்தலைக் குறையும் துதிக்கை மறைத்தலையும் அங்குசம் அழித்தலையும் மோதகம் அருளல் தொழிலையும் அறிவிக்கிறது.

ஐந்தொழில்களையும் செயற்படுத்தும் அழகிய ஞான மூர்த்தமே ஐங்கரன் எனவே ஐந்தொழில் புரியும் சிவனுக்கும் இவருக்கும் பேதமில்லை எனலாம்.

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்”

-சிவஞானசித்தியார்.

எந்தக்காரியம் செய்யத்தொடங்கும் முன்பும் இடையூறின்றி அந்தக்காரியம் நிறைவேறுவதற்கு விநாயக வழிபாடு இன்றியமையாதது.

மனிதரும் முனிவரும் தேவர்களும் விநாயகருக்கு பூஜை செய்து விட்டுத்தான் எதனையும் ஆரம்பிப்பார்கள்.

இதர கடவுளரும் இவரை வழிபட்டே விக்கினங்களைத் தீர்த்துக்கொண்டதாக புராணங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.

இப்படியான விநாயகரை எவரும் வழிபாடு செய்து அருளைப் பெறலாம். இவரை வேத ஆகம முறைப்படி மட்டுமன்றி அதற்குப்புறம்பான எளிமையான வழிபாட்டு முறையினாலும் வழிபட்டு உய்தி பெறலாம்.

ஞானநந்த சொரூபியாக விநாயகக் கடவுள் தம்மை வழிபாடும் அடியவர்களுக்குத் தமது கிரியா சக்தியினால் வினையை நீக்கி ஞான சத்தியினால் ஆணவ மலத்தை ஒழித்து ஞானப் பிரகாசத்தை ஏற்படுத்தி அருளுவார் என்பது திண்ணம்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தனிவிப்பான் – விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற்
கண்ணிற் பணிமின் கனிந்து

கபில தேவ நாயனார்-

சைவப்புலவர் வை. சி. சிவசுப்பிரமணியம்
கந்தர்மடம் யாழ்ப்பாணம்