October 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மங்களம் பெருகும் பங்குனி உத்திரம்!

தமிழ் மாதங்கள் பன்னிரண்டு; பன்னிரண்டாவது மாதம் பங்குனி.

நட்சத்திரங்கள் இருபத்தேழு; இதில் பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம். எனவே பன்னிரண்டாவது மாதத்தில் பன்னிரண்டாவதாக வரும் நட்சத்திரமாகிய உத்திரம் மிக விசேடமாக கருதப்படுகின்றது.

இது சூரியனின் நட்சத்திரமும் ஆகும். இந்த நாளில் பூரணை தினமும் ஞாயிற்றுக்கிழமையும் அமைவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பங்குனி மாதமும் உத்திர நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள் பால் ஒளி வீசும் சந்திரனின் தன்னொளி நிறைந்த நிறைமதி நாள், தென்றல் தவழும் திருநாள், இன்பம் கொழிக்கும் இனிய நாள் பங்குனி உத்திர நன்னாள்.

தென் திசையில் சென்ற சூரியன் வட திசை திரும்பி நிலநடுக்கோடு தாண்டி நம்மை நோக்கி வரும் மாதம் பங்குனி ஆகும்.

வாடைக் காற்றும் நடுங்கும் குளிரும் வருத்தும் பனியும் நீங்கி வசந்த காலம் அரும்புவதை காட்டும் மாதம் பங்குனி மாதம் ஆகும்.

இலை உதிர்ந்த மரங்கள் புதுத்தளிர் விட்டு பூத்துக் குலுங்கி இளவேனில் காலத்தை வரவேற்கும் மாதத்தில் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு பல புராணக் கதைகள் இருக்கின்றன.

பங்குனி உத்திர விழா சிவபெருமானுக்கும் முருகனுக்கும் உகந்ததாக கருதப்படுகின்றது. இத்திருநாள் தெய்வங்களுடைய திருமண நாளாக சிறப்பித்து கூறப்படுகிறது.

பங்குனி உத்திரத் திருவிழாவின் சிறப்பை ஞான சம்பந்தப்பெருமான் தேவாரப்பாடலில் அழகாகப் பதிவு செய்துள்ளார்;

‘மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திர நாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்’.

இதில் ‘பலிவிழாப் பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா’ என்று கூறுகிறார்.

‘பலி’ என்ற சொல்லிற்கு பல பொருள்கள் உண்டு. செழித்தல் என்ற பொருளுண்டு. விழா என்றால் மக்கள் செல்வச் செழிப்புற்று பெற்ற பயனை மற்றவர்களுக்கும் கொடுக்கும் விழா பலி விழா எனப்பட்டது.

பசியாற்றி பிணி போக்கி வாழ வைக்கும் விழா பங்குனி விழா. மக்கள் உள்ளம் தழைத்து இன்பத்தில் இயங்கி ஆரவாரித்து கொண்டாடும் விழா பங்குனிப் பெருவிழா.

பங்குனி உத்திரவிழா கொண்டாடும் நோக்கம் என்ன என்பதை கந்தப்புராணம் கூறுகிறது. இறைவன் மோன நிலையில் இருக்கும் போது மன்மதன் சிவனின் மோன நிலையை கலைக்க மலர் அம்பு தொடுத்தான். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்த தீப்பொறி மன்மதனை எரித்து சாம்பலாக்கியது.

தேவர்களின் துன்பம் நீக்க இமய மலை அரசன் இமவான் தன் மகள் பார்வதியை மணக்குமாறு இறைவனை வேண்டி நின்றாள். பங்குனி உத்திரமே திருமணத்திற்கு சிறந்த நான் என நினைத்தாள்.

அந்த நாளில் இறைவன் இமவானின் வேண்டுகோளை ஏற்று இமயமலைக்குச் சென்று பார்வதியை மணந்துகொண்டார். இதனைக் கச்சியப்ப சிவாசாரியார்,

‘ஆதியின் உலகமெல்லாம் அளித்திடும் அன்னை தன்னைக்
காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர்
ஒது பங்குனியின் திங்கள் உத்தரம் இன்றேயாகும்
ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி என்றான்’

                                                                                               (கந்தபுராணம்)

இந்த தெய்வீகத் திருமணத்தினால் உலகம் இருமை நீங்கி ஒருமை பெற்றது. துன்பம் அகன்று செழித்தது. கண்டவர் மூலமாம் வினைகட்கு இன்றே முடிவு ஒருங்கு உற்றது’ என்றார் கச்சியப்பர். அந்த இன்பத்தை இறைவன் சக்தியோடு இணைந்து இப்பங்குனி உத்திர நாளில் உலகுக்கு அளித்தான்.

இந்தப் பங்குனி உத்திரப் பெருவிழா காஞ்சியிலும் கபாலீச்சரத்திலும் மிகச்சிறப்பாக நடைபெறுவதைக் காணலாம்.

இறைவனும் இறைவியும் மணம் செய்து இறைவன் சக்தியோடு சேரின் உலகில் காதல் வாழ்க்கை நன்கு சிறக்கும் என்பதை அடியவர்கள் உணர்கின்றனர்.

பங்குனி உத்திரத் திருநாளில் தெய்வங்களுக்கு மட்டுமல்ல மானிடர்களும் இந்நாளை திருமண நாளாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

 

பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்ற சிறப்புக்கள்

பார்வதி- பரமேஸ்வரர் திருமணம்
மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம்
இராமபிரான்- சீதாதேவி திருமணம்
பரதன்- மாண்டவி திருமணம்
லட்சுமணன்- ஊர்மிளை திருமணம்
சத்துருக்கன்- சுருதகீர்த்தி திருமணம்

இந்திரன்- இந்திராணி திருமணம்
ஆண்டாள்- ரங்கநாதர் திருமணம்
முருகன்- தெய்வானை திருமணம்
நந்திதேவர்- சுயசை திருமணம்
சாஸ்தா- பூரணை, புஷ்கலை திருமணம்
சந்திரன்- இருபத்தேழு நட்சத்திர மங்கையர் திருமணம்
மகாலட்சுமி- நாராயணன் மார்பில் இடம்பிடித்தது.
கலைமகள்-பிரம்மன் நாவில் அமர்ந்தது.
ஐயப்பன் அவதாரநாள்
அர்ச்சுனன் அவதாரநாள்
மன்மதன் உயிர்தெழுந்த நாள்
மகரிஷி மகளான இலக்குமி பார்கவியாக அவதரித்த நாள்
வள்ளிநாயகி அவதாரநாள்

பங்குனி உத்திர விரதம்

இந்நாளில் அதிகாலை எழுந்து குளித்து வீட்டில் சுவாமிப்படத்தில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்கவேண்டும்.

இந்நாளில் கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர், அனுபூதி, கந்தர் அலங்காரம், போன்ற நூல்களைப் படிக்கலாம்.

இவற்றை எல்லாம் படிக்க இயலாதவர்கள் ‘ஓம் சரவண பவ’ மந்திரத்தை உச்சரிக்கலாம். முருகன் கோவில்கள், சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களுக்கு சென்று வணங்கலாம்.

பகல் முழுவதும் உணவு அருந்தாமல் மாலையில் பழம், பாயாசம், பால் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

தோஷங்கள் நீங்கும்

ஜாதகத்தில் சிலருக்கு தோஷங்கள் இருக்கலாம். களத்திர தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் போன்ற தடைகள் இருந்தால் திருமணங்கள் நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம்.

இவ்விதமான தோஷமுள்ளவர்கள் பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்.

திருமணத் தடை நீங்க பங்குனி உத்தநாளில் கல்யாண சுந்தரவிரதம் என்னும் விரதத்தை அனுட்டித்து சிவனை வழிபாட்டால் திருமணப் பாக்கியம் கிட்டும், இல்லறவாழ்வு இனிமையாக இருக்கும் என்பதும் ஐதீகம்.

இந்நன்னாளில் பசுவாகிய ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்காக கல்யாணசுந்தர விரதம் இருந்து சிவனை அடைவதால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி உத்திரத்தில் செய்யக்கூடியவை

இத்தினத்தில், திருமண ஓலை எழுதுதல், தாலிக்கு பொன் உருக்குதல், சீமந்தம் செய்தல், புதிய கோவில் சிலை பிரதிஷ்டை செய்தல், நீர் நிலை உருவாக்குதல், வியாபாரம் தொடங்குதல், புதிய பொருட்கள் வாங்குதல், சுபகாரியங்கள் செய்தல் போன்றவை நன்மையில் முடியும்.

அறுபடை வீடுகள், ஏனைய முருகன் ஆலயங்கள், சிவாலயங்கள், பெருமாள் கோவில்கள் இவை எல்லாவற்றிலும் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து தெய்வங்களின் நல்லாசியும் கிடைத்து ஆத்மபலம், மனோபலம் பெற்று அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ இறையருள் பெருகட்டும்.

-தமிழ்வாணி (பிரான்ஸ்)