காசியை கயிலை கண்டும் கருத்திற் களங்கம் என்னும்
பாசியை நீக்கார் பயன் பெறுவாரோ பரிந்து நன்மை
பேசி அன்பு பணிசெய்வார் பெரியோர் மெய்ப்பேதளிக்க
மாசியில் ஆசிதருவாய் மாசில்லாத மாணிக்கமே
(அகத்தியர்)
மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்வார். இதனால் கும்ப மாதம் என்றும் அழைப்பார்.
இருபத்தேழு நட்சத்திரங்களில் மக நட்சத்திரம் பத்தாவது நட்சத்திரமாகும். மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இம்மாதத்தில் வரும் மக நட்சத்திரம் பூரணையோடு கூடி வருவதால் மிகவும் விசேடமாகக் கருதப்படுகிறது. இம்மாதம் புனித நீராட ஏற்ற மாதமாகும்.
புண்ணிய தீர்த்தங்கள் சமுத்திரக்கரைகளிலும் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
‘மகம் என்னும் நட்சத்திரக் கூட்டம் வெட்டரிவாள் போல் கரை போல அவற்றின் இடைப்பட்ட முழுநிலா கடல் போலத் தோன்றும். மதியும் மக வெண்மீனும் கோயிலும் பொய்கையும் போன்று’ என்று நச்சினார்க் கினியார் கூறுகிறார்.
ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரம் வந்தாலும் மாசி மகத்தில் சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார்.
அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். மகம் பிதிர்களுக்குரிய நட்சத்திரமாகும்.
மாசிமகம் என்றதும் கும்பகோணம் தான் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வரும்.
அங்குள்ள கும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் என்ற விழா 12 வருடத்திற்கு ஒருமுறை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அங்கு 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச் சுமைகளை தீர்ப்பதற்காக மகா மகத் தீர்த்தத்தை வந்து அடைகின்றன. இந்நாட்களில் மக்கள் தீர்த்தமாடி சிவபெருமானின் அருளைப் பெறுகின்றனர்.
மாசிமகம் சிவபெருமானுக்குரிய நாளாகக் கருதப்படுகிறது. ‘பிறவிக் கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் அமிழ்ந்து வருந்தும் பக்தர்களை இறைவன் அவற்றினின்று எடுத்து அருட்கடலில் இன்ப வெள்ளத்தில் அமிந்த்தித் திளைக்கச் செய்யும் திருவருளே கடலாட்டுவிழா, தீர்த்தவாரி என்று சிறப்பு பெறுகிறது. இதை ஞானசம்பந்தப் பெருமான்,
“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடல் ஆணேறு ஊரும் அடிகள் அடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்று தேவாரப் பாடலில் கடலாடி சிறப்பை கோடிட்டுக் காட்டுகிறார்.
இந்த மாசி மகத்தில் அன்று பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கமும் உண்டு. வல்லாள மகாராஜனுக்கு சிவபெருமானே மகனாக வந்து அவருக்கு தர்ப்பணம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மாசி மகத்தில் அன்று கும்பகோணத்தில் கும்பேஸ்வரருக்கு சிறப்பாக கொண்டாடுவதற்கு புராணக்கதைகள் உண்டு.
பிரளய காலத்தில் பிரம்மாவால் மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை சிவன் பாணத்தால் அடித்ததாகவும் குடம் உருண்டு வந்து நின்ற இடம் கும்பகோணம் ஆகும்.
சிதறிய அமிர்தம் சேர்ந்த இடம் மகாமகக் குளம் ஆகும். அமிர்தத் துளிகள் சேர்ந்த லிங்கமானது அதுதான் கும்பேஸ்வரர் ஆவார்.
மாசி மகத்தில் நடைபெற்ற சிறப்புகள்
- சிவபெருமான் வருண பகவானுக்கு சாப விமோசனம் அளித்தது இந்நாளில்தான்.
- முருகன் சிவபெருமானுக்கு உபதேசம் செய்தது.
- உமாதேவியார் வலம்புரிச் சங்கு வடிவில் யமுனை நதிக்கரையில் தவம் செய்த பொழுது. தட்ச பிரஜாபத வலம்புரி சங்கை எடுத்தார். அது குழந்தையாக மாறியது உமாதேவியார் தட்சாயணி ஆக மாறியது.
- மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பாதாளத்திலிருந்த பூமியை மீட்டு எடுத்தது.
- வல்லாள மகராஜனுக்கு சிவன் மகனாக வந்து தர்ப்பணம் செய்தது.
இந்நாளில் ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகனை வேண்டி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
இந்ததினத்தில் சூரியபகவான் சொந்த ராசியை பார்க்கும் நாளாக உடம்பில் மாற்றங்கள் ஏற்படும் நாளாக பூமிக்கு உன்னதமான அதிர்வலைகளை ஏற்படுத்தி கிரக மாற்றங்களை கொடுக்கும் சிறந்த நாளாக மாசிமகத் திருநாள் கருதப்படுகிறது.
மாசிமகத்தில் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளில் மந்திரம் உபதேசம் பெறுவது, கல்வி தொடங்கும் செயல்களை செய்வது, அன்னதானம், ஆடைகள் தானம் கொடுப்பது மிகவும் சிறப்பானது.
இந்நாளில் அனைவரும் விரதம் அனுஷ்டித்து சிவபெருமான், உமாதேவி, விஷ்ணு ஆகிய தெய்வங்களின் பேரரருள் பெறுவோமாக.. வாழ்வில் நோய் பிணி நீக்கி அனைவரும் நலமுடன் வாழ மாசிமகத் திருநாள் மங்களம் அருளட்டும்.
(தமிழ்வாணி பிரான்ஸ்)