நட்சத்திரங்கள் 27 அவற்றுள் எட்டாவது நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் என்று சொல்லப்படுகின்றது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் பௌர்ணமியுடன் சேர்ந்து வருகிறது.
தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் தைப்பூசம் என்று இந்துக்களால் சிறப்பித்துக் கொண்டாடப்படுகின்றது.
தேவர்களின் குருவாக பிரகஸ்பதி விளங்குகின்றார். இவர் பூச நட்சத்திரத்தின் தேவதையாக கருதப்படுகின்றார்.
பூச நட்சத்திரத்தில் குருவாகிய பிரகஸ்பதியை வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். தைப்பூச நன்னாளில் புண்ணிய நதிகளில் நீராடினால் மிகுந்த நன்மை பயக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும்.
தைப்பூசம் முருகப்பெருமானுக்கு மிகவும் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்தத் திருநாள் முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அதேபோன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிவாலயங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் அனுஷ்டித்து முருகனை வழிபடுவார்கள்.
நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். அறுபடை வீடுகளில் பழனியிலும் திருச்செந்தூரிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
தைப்பூச வரலாறு
அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடாக பழனி மலை விளங்குகிறது. திருவாவினன்குடி என்றும் சக்திகிரி என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.
தேவர்கள் அசுரர்களின் துன்பம் தாங்க முடியாமல் சிவனிடம் முறையிட்டனர்.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற திருவுளங்கொண்டு தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார்.
ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறி கந்தனாக மாறிய அவதாரம் தான் முருகன்.
அன்னை உமாதேவியார் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் நின்ற முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிய நாள் தைப்பூச நாளாகும்.
அதனால்தான் மற்ற ஆலயங்களை விட பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பழனியில் தைப்பூசத் திருவிழா
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூசம் ஜனவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.
பழனி மலையடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் ஆலயத்திலுள்ள கொடிக்கட்டி மண்டபத்தில் கொடியேற்ற வைபவம் ஆரம்பமாகிறது.
தைப்பூசத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
ஜனவரி 27ஆம் திகதியன்று முக்கிற நிகழ்வாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்று தைப்பூச நாளான 28ஆம் திகதி தேரோட்ட வைபவம் நடைபெறவுள்ளது.
தைப்பூசத்திருவிழாவின் நிறைவாக ஜனவரி 30 ஆம் திகதி கொடி இறக்குதல் வைபவமும் நடைபெறும்.
இங்குள்ள மூலவர் தண்டாயுதபாணி என்று அழைக்கப்படுகின்றார். இந்த சிலை போகர் சித்தர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
தைப்பூச திருவிழாவையொட்டி பல இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், இத்திருநாளில் நேர்த்திக்கடனை நிறைவு செய்வர்.
திருச்செந்தூர் தைப்பூசத் திருவிழா
அன்னை பராசக்தி கொடுத்த சக்திவேல் கொண்டு முருகப்பெருமான் சூரனைச் சங்கரித்த நிகழ்வு இத்திருத்தலத்தில் நடைபெற்றதாக புராணம் கூறுகிறது.
திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தன்று அதிகாலை 3 மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.
பின்னர் காலை 6 மணியளவில் அபிஷேகமும் 8.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்வும் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் மாலை 5 மணிக்கு தூராட்சி தீபாராதனை நடைபெறும்
இம்முறை அலைவாயுகந்த பெருமாள் நிகழ்வு உட்பிரகாரத்தில் நடைபெறுகிறது
வடலூரில் தைப்பூச திருவிழா
வடலூரில் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார். ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாரின் நினைவாக ஜோதி தரிசனம் தைப்பூச தினம் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஈழத்தில் தைப்பூசம்
ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் இந்நாளை மிகவும் புனிதமாகக் கொண்டாடுவார்கள். முருகனுக்குரிய நாளாகவும் புதிர் எடுக்கும் நாளாகவும் சிறப்பாக கொண்டாடுவர்.
அதிகாலையில் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வார்கள். ஆண்கள் நெல் அறுக்கும் அரிவாள், தேங்காய் கற்பூரம்,கத்துக்கடகம் என்பவற்றை எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்வார்கள். வயலில் சூரியனை வணங்கி தேங்காய் உடைத்துத் தீபம் காட்டுவர்.
முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை எடுத்து வீட்டிற்கு கொண்டு வருவர். குடும்பத்தலைவி சுவாமி அறையில் வைப்பார்.
அதில் சில நெற் மணிகளை எடுத்து உமியை நீக்கிவிட்டு சமைக்கும் அரிசியுடன் கலந்து சமைப்பார்.
முருகன் ஆலயங்களுக்கு சென்று பால்குடம், காவடி எடுத்து நிறைவேற்றுவர்.
மலேசியத் தைப்பூச விழா
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும். இது ஒரு மலை கோவில். மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது.
தைப்பூசத் திருவிழாவை காண்பதற்கு சிங்கப்பூர் அவுஸ்திரேலியாவிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 10 மணிக்கு அதிகாலையில் இருந்து ஊர்வலமாக நடந்து வருவார்கள்.
நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். சுங்கைப்பத்து ஆற்றில் நீராடி மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி முருகனை வணங்கி மகிழ்வார்கள்.
காவடி எடுப்பது ஏன்?
தமிழ் கடவுள் முருகனுக்கு தான் முதன் முதலில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.
ஏன் தெரியுமா? ஒரு முறை அகத்திய முனிவர் தன் சீடனான இடும்பனை அழைத்து கைலையிலிருக்கும் சிவகிரி, சக்திகிரி என்னும் இரு மலைகளை கொண்டு வரும்படி பணித்தார்.
இடும்பனும் இரு மலைகளையும் இருபுறமும் தொங்க காவடியாகக் கட்டி எடுத்து வந்தான்.
முருகனும் இவ்விரு மலைகளையும் பழனியில் நிலைபெறச் செய்யவும் இடும்பனுக்கு அருளவும் திருவுளம் கொண்டார்.
இடும்பன் வழி தெரியாமல் தடுமாறிய போது முருகன் அரசன் போல் கோலம் பூண்டு குதிரையில் ஏறி வந்தார்.
ஆவினன் குடிக்கு செல்லுமாறு பணித்தார் இடும்பனும் ஆவினன்குடிக்கு வந்து காவடியை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான்.
மீண்டும் காவடியைத் தூக்க முயற்சித்தான். முடியாமல் திகைத்தான் சுற்றும் முற்றும் பார்த்தான்.
சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாக கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். சிறுவனை மலையிலிருந்து இறங்கும்படி இடும்பன் வேண்டினான்.
ஆனால் சிறுவனோ இந்த மலை தனக்கே சொந்தம் என்று உரிமைக் கொண்டாடினான். சினம் கொண்ட இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான்.
அப்போது வேரற்ற மரம் போல் இடும்பன் சரிந்து விழுந்தான். அகத்தியர் இடும்பன் மனைவியுடன் சென்று சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி வழங்கி தனது காவல் தெய்வமாக நியமித்தார்.
இடும்பன் போல் காவடி ஏந்தி சன்னிதிக்கு சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை எடுத்து வரும் பக்தர்களுக்கு தான் அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.
இதனால்தான் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் வந்ததாக கூறுகிறார்கள்.
பழனியில் தைப்பூசத் திருவிழாவிற்காக பல்லாயிரம் மக்கள் காவடி எடுப்பார். அவற்றுக்கு நிறைய பெயர்கள் உண்டு.
காவடி வகைகள்
மயில்தோகை காவடி, தீர்த்த காவடி, அலகுக்காவடி, பறவைக்காவடி, சுரைக்காய் காவடி, தானியக்காவடி, இளநீர்க்காவடி, தொட்டில் காவடி, கரும்பு காவடி, பால் காவடி, பஞ்சாமிர்த காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, பூக்காவடி, முள்ளுமிதி காவடி, சர்க்கரை காவடி, கற்கண்டு காவடி, மலர்காவடி, காகிதபூக் காவடி, அலங்கார காவடி, கூடை காவடி, செருப்பு காவடி, விபூதி காவடி, அன்னக் காவடி,
கற்பூரக் காவடி, வேல் காவடி, வெள்ளி காவடி, தாளக்காவடி, பாட்டுக்காவடி, ஆபரணக் காவடி, தாழம்பூ காவடி, சந்தனக்காவடி, மிட்டாய் காவடி, தயிர் காவடி, தேன் காவடி, சர்ப்ப காவடி, அக்னி காவடி, அபிஷேக காவடி, தேர்க்காவடி, சேவல்காவடி, சாம்பிராணிக் காவடி, மயிற்தோகை அலங்கார காவடி, இரத காவடி ஆகிய காவடிகள் உள்ளன.
சிதம்பரத்தில் தைப்பூசத் திருவிழா
தைப்பூசத் திருநாளில் வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர் ஜெய்மினி முனிவர் தில்லை வாழ் அந்தணர்கள் 3000 பேருக்கு சிவன் உமையுடன் திரு நடனம் ஆடிக் காட்டினார்.
சிதம்பரத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக பத்து நாட்கள் நடைபெறுகின்றன. வியாக்கிரபாதர், பதஞ்சலி, ஜைமினி முனிவர் ஆகியோரின் சிலைகள் ஒரே பீடத்தில் எழுந்தருளிச் செய்வர்.
செய்வதில்லை சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தமாடலும் நடன தரிசனமும் நடைபெறும். தைப்பூச திருநாளில் இறைவன் நடனம் ஆடியதால் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
தைப்பூச சிறப்பு
தைப்பூசம் பல வகையில் சிறப்பு பெற்றதால் இத்திருநாள் புனித நாளாக முருகனுக்கும் சிவனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.
தைப்பூச நாளில் உமை தோன்றியதாகக் கூறப்படுகிறது. உமாதேவியார் முருகனுக்கு ஞானவேல் கொடுத்தது. வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டியது.
பூம்பாவை என்ற பெண்ணை சம்பந்தர் தேவாரம் பாடிய உயிர்ப்பித்தது. சிவனும் உமையும் நடனம் ஆடியது.
தைப்பூசத்தில் செய்பவை
தைப்பூச நாளில் நன்மையான காரியங்கள் செய்வார்கள். தைப்பூசத்தன்று ஏடு தொடக்குவது, காது குத்துதல், புதிர் எடுத்தல், புதுமனை புகுதல், வணிக நிலையங்களை திறத்தல், போன்றவற்றை செய்வார்கள்.
தைப்பூச நன்னாளில் இறையருள் பெற்று அனைவரும் நலமுடன் வாழவேண்டும். திருஞானசம்பந்தரின் பாடல் வரிகள் தை ப்பூச நாளை குறிக்கின்றது.
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.