January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

14 வருடங்களின் பின் பாகிஸ்தானில் கால்பதித்த தென் ஆபிரிக்கா அணி

(Photo: Cricket South Africa/Twitter)

தென் ஆபிரிக்க அணி 14 வருடங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளது.

இந்த விஜயத்தில் தென் ஆபிரிக்க அணி 2 டெஸ்ட் மற்றும் 3 சர்வதேச இருபது 20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது.

இலங்கை அணி 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்த போது லாகூரில் வைத்து அணி வீரர்கள் பயணித்த பஸ்ஸின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதன்போது இலங்கை வீரர்கள் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் சாரதியின் சாதுரியத்தால் அத்தனை வீரர்களும் பாதுகாப்பாக காப்பற்றப்பட்டனர்.

உடனடியாக தொடர் ரத்துச்செய்யப்பட்டு வீரர்கள் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதுடன் அதன் பிறகு அங்கு சர்வதேச போட்டிகள் ஏதும் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக நடத்தப்படவில்லை.

ஆனாலும், அந்த கசப்புணர்வை மறந்து இலங்கை அணி மீண்டும் 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானில் சென்று விளையாடி சர்வதேச மட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயரை துடைத்தது.

இதனை தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகிய அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து விளையாடின.

அதன் தொடர்ச்சியாக தற்போது தென் ஆபிரிக்காவும் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளதுடன் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

இது 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் மண்ணில் தென் ஆபிரிக்கா விளையாடும் முதல் டெஸ்ட் தொடராகும்.

எவ்வாறாயினும், தென் ஆபிரிக்கா 2010, 2013 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியதும் நினைவுகூரத்தக்கது.