January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மார்கழி மாதமும் திருவெம்பாவையும்

தமிழ்வாணி -பிரான்ஸ்

மார்கழி மாதம்

மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்றும் தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தெய்வீக மணம் வீசும் மாதம் மார்கழி மாதம் மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் கூறினார்.

மிகப் பழங்காலம் தொட்டே மார்கழி மாதத்தை கடவுளை வழிபடுவதற்கான மாதமாக கருதி வந்திருக்கிறார்கள்.

இறைவழிபாட்டிற்காக இம்மாதத்தை ஒதுக்குவதால் இம்மாதத்தில் எவ்வித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

மனிதர்களுக்கு ஒரு வருடம் போல தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்தராயணம் என்று கூறப்படுகிறது.

இது தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்று கூறப்படுகின்றது.

இது தேவர்களுக்கு இராக்காலம் ஆகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலமாகும். இது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

இம்மாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகாமையில் வருவதால் நல்ல ஒக்சிசன் சக்தி கிடைக்கின்றது.

தூய காற்று வீசும் போது நோய்க் கிருமிகள் பரவாது நோயில் இருந்து மக்களை பாதுகாக்கின்றது. பிராண சக்தி அதிகமாக கிடைக்கும்.

புத்துணர்ச்சி ஏற்படும் அதிகாலையில் பெண்கள் வாசலில் மாவினால் கோலம் போடுவார்கள். கோலத்து மாவை எறும்புகள் உண்ணுவதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கின்றது.

அதிகாலையில் ஆலயங்களில் வழிபாடு தொடங்குவார்கள். திருப்பள்ளி எழுச்சி பாடப்படும். இம்மாதத்தில் திருவெம்பாவை பாடல்கள் திருப்பாவை பாடல்கள் பாடப்படும்.

சைவ ஆலயங்களில் திருவெம்பாவையும் விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படுகின்றன.

திருவெம்பாவை

மார்கழி மாதத்தில் வரும் திருவெம்பாவை சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது. இந் நோன்பு மார்கழித் திங்களில் திருவாதிரைக்கு 10 நாட்களுக்கு முன் தொடங்கி திருவாதிரையன்று நிறைவு பெறும்.

திருவெம்பாவை என்னும் பாடல் மாணிக்கவாசக சுவாமிகளால் திருவண்ணாமலையில் அருளச் செய்யப்பட்டது.

இப்பாடல் ஒவ்வொன்றின் முடிவிலும் ‘ஏலோ ரெம்பாவாய்’ என முடியும். இதில் 20 பாடல்கள் இடம்பெறுகின்றன.பாடல்கள் மார்கழி மாதத்தில் வரும் திருவெம்பாவை விரத நாட்களில் அதிகாலையில் பாடப்படுகின்றன.

“ஏலோ ரெம்பாவாய்” என்பதில் ஏல்-ஓர் என்பன அசைகள் “எம்பாவாய்” என்பது எம் தோழியே என்பதாகும். மணிவாசகப்பெருமானை நோக்கி ‘ ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக‘  என்று சிவபெருமான் தானே கேட்டுப் பெற்றார்.

மணிவாசகப் பெருமான் இப்பாடல்களைப் பாட சிவபெருமானிடம் திருக்கரங்களால் எழுதியதாக வழி வழியாக சொல்லப்பட்டு வருகிறது.

திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்”  என்பது கருத்தாகும்.

இப்பாடல்கள் மார்கழித் திங்கள் அதிகாலையில் துயிலெழுந்து, நீர்நிலைகளுக்கு நீராடச் செல்லும் பெண்கள் மற்றும் தோழியரையும் அழைக்கும் விதத்திலும் அவர்களோடு உரையாடும் விதத்திலும் இயற்றப்பட்டுள்ளன.

மனோன்மணி, சர்வபூத தமணி, பலப்பிரமதனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரௌத்திரி, சேட்டை என்னும் ஒன்பது சக்திகளுள் முன்னவரை பின்னர் துயில் எழுப்பும் விதத்திலும் எம்பெருமானை வாழ்த்தி தம்முள் பாடுவதாக இயற்றிய பாடல் தொகுதியே திருவெம்பாவை என்ற தத்துவ கருத்தாகும்.

திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாடல்கள் கன்னிப்பெண்கள் தம்முள் ஒருவரையொருவர் துயில் எழுப்புவதை உணர்த்துகின்றன.

09 ஆம் பாடல் நற்கணவரின் இயல்பையும், அத்தகையவரை தமக்கு அருள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

10 ஆம் பாடல் இறைவனின் புகழை அறுதியிட்டு கூற முடியாது என்பதை உரைப்பது.

11ஆம் பாடல் பெண்கள் நீராடுவதற்கு ஆயத்தம் ஆவதையும் இறைவனை வேண்டுவதாகவும் கூறுகிறது.

13ஆம் பாடல் பொய்கை அம்மையப்பராக காட்சி தருவதாக கூறப்படுகிறது.  14ஆம் பாடல் கௌரி நோன்பிற்கைமைய சோதி நிறம் கூறி சக்தியின் கருணையைக் கூறுவது.

15ஆம் பாடல் இறைவனின் அருட்கொடைகளில் ஈடுபடுவோருக்கு மெய்ப்பாடுகளை உணர்த்தி, இறை அன்பினை பெற கன்னிப்பெண்கள் நீராடுதலைக் கூறுவது.

16ஆம் பாடல் உலகம் அனைத்தும் மழை பொழிய வேண்டிப்பாடுவது.

17ஆம் பாடல் இறைவன் தானே சென்று அருளும் இறைவன் அருளை அறிவிப்பது. 18ஆம் பாடல் சூரிய உதயத்தின் உவமைகளைக் கூறி இறைவன் இலக்கணங்களை எடுத்தியம்புவது.

19ஆவது பாடல் பெண்கள் தங்கள் கற்பின் உறுதியான கொள்கைகளை எடுத்தியம்பி இறைவன் அருள் புரிய வேண்டும் என இரப்பதை கூறுவது.

20ஆம் பாடல் ஐந்தொழில் இயக்கும் இறைவன் இயல்பை உணர்த்தி அவன் திருவடி கௌரி தம்மை ஆட்கொள்ளும் நிறம் கூறி மார்கழி நீராடலின் முடிவைக் கூறுவது.

திருவாதிரை நோன்பு

சிவபெருமானுக்குரிய விரதங்களில் மார்கழி திருவாதிரை விரதமும் ஒன்றாகும். இவ் விரதம் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் நிறைவு நாளாக இது அமைகிறது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.

இதனால் சிவபெருமானை ஆதிரையான் என்றும் ஆதிரை முதல்வன் என்றும் அழைப்பர். இந்நாளில் சிதம்பரத்தில் சிவனுக்கு விசேட அபிஷேக திருவிழாவும் ஆருத்திரா தரிசனமும் சிறப்பாக நடைபெறும்.

இவ் விரதத்தை அனுஷ்டித்து ஆருத்ரா தரிசனம் பெறுவதால், முக்தி கிடைக்கும் என்று சைவ நூலோர் கருத்தாகும்.

இவ்விரத மகிமையை சங்கர சங்கீதை நூல் சிறப்பாகக் கூறுகிறது. எல்லா சிவாலயங்களிலும் நடராசப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.

திருவெம்பாவை, சிவ தோத்திரங்கள் பாடி நெய்விளக்கேற்றி நடராசப் பெருமானை வழிபடுவார்கள்.

ஆருத்ரா தரிசனத்தில் அன்று சிவபெருமானுக்கு சுவையான களி அமுது படைத்து வழிபடும் மரபு இன்று வரை நடைபெறுகிறது.

திருப்பல்லாண்டு அருளிய சேந்தனார் பெருமானுக்குத் தித்திக்கும் களியை விருந்தாகக் கொடுத்து உபசரித்து அவரால் ஆட்கொள்ளப்பட்டார்.

அதனால் அன்றைய தினம் களியை படைத்து சிவபெருமானை வழிபடுவர்.

மார்கழி திருவாதிரை நாளின் சிறப்பை ஞானசம்பந்தர் ‘ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் ‘என்று பாடியுள்ளார். நடராசப் பெருமான் வியாக்கிரபாதருக்கும் திருவாதிரை நட்சத்திர தினத்தில் திரு நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.

நம்மை எல்லாம் ஆட்டி வைக்கும் இறைவன் தானும் ஆடிக் கொண்டிருக்கின்றான். அவன் ஆடுவதால் தான் இவ்வுலகம் இயங்குகிறது. உலக சிருஷ்டியே அவனது அற்புத நடனமாகும்.

உலகத்தின் மையமே சிதம்பர நடராஜரின் பாதத்தின் கீழ் உள்ளது என்று விஞ்ஞானமே விதந்து உரைக்கிறது.

திருவாதிரை நோன்பு நடராஜரின் நடனமும் சைவ உலகத்தினருக்குத் கிடைத்த பெரும் பாக்கியமாகும். அனைவருக்கும் சிவன் அருள் கிடைத்து இவ்வையகத்தில் இன்புற்று வாழ்வோமாக..

(படங்கள்: நன்றி ஸ்ரீ கைலேஸ்வரம் (கப்பிதாவத்தை தீவு கோவில்) கொழும்பு)