January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விக்கினங்கள் தீர்க்கும் விநாயகர் சஷ்டி விரதம்

                                                                                                                                                                                                                                                                                                                          -தமிழ்வாணி (பிரான்ஸ்)

திருவாக்கும் செய்கருமங் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தம் கை.

விநாயகன் என்றால் தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் என்பது ஒரு பொருள். நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் விநாயகரை வழிபட்ட பின்னரே கருமத்தை தொடங்குகின்றோம்.

ஆலயங்களில் முதல் பூஜை விநாயகருக்கு நடைபெற்ற பின்னரே மற்ற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும்.

அறுவகை சமயங்களுள் விநாயகரை வழிபடும் சமயத்திற்கு காணபத்தியம் என்று பெயர். விநாயகருக்குரிய விரதங்களில் ஆவணி சதுர்த்தியும் விநாயகர் சஷ்டியும் பிரதானமானவை.

இதில் விநாயகர் சஷ்டி விரதத்தை பிள்ளையார் கதை என்றும் பெருங்கதை என்றும் கூறுவார்கள்.

விநாயகர் சஷ்டி விரதம் கார்த்திகை தேய்பிறை பிரதமை திதியில் ஆரம்பமாகி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் நிறைவுபெறுகிறது. இந்த விரதம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றது.

இந்து மதத்தில் பல விரதங்கள் உண்டு. ஒவ்வொரு விரதங்கள் அனுட்டிப்பதற்கும் ஒவ்வொரு நியதி உண்டு. அந்த வகையில் விநாயகர் சஷ்டி விரதம் அனுட்டிப்பதற்கு உள்ள விதிகளை காண்போம்.

விரத நியதி

  • விரதம் ஆரம்பித்த முதல் நாளில் ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் காப்பு கட்டுதல் வேண்டும்.
  • முதல் 20 தினங்களிலும் பகல் ஒரு வேளை உணவு உண்ணுதல் வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பட்சணங்கள் படைத்தல் வேண்டும்.
  • 21 ஆம் நாள் மோதகம், அவல், எள்ளுருண்டை, பால், இளநீர், கரும்பு போன்ற 21 வகையான உணவுகள் நைவேத்தியம் செய்து படைத்தல் வேண்டும்.
  • சஷ்டி அன்று உபவாசம் இருத்தல் வேண்டும்.
  • அடுத்த நாள் அதிகாலையில் கட்டியிருந்த காப்பை அவிழ்த்த பின் பாரணை செய்தல் வேண்டும்.

விரத நாட்களில் ஆலயங்களில் நடைபெறும் பூசையில் கலந்து கொண்டு பெரியோர்களால் நடத்தப்படும் பிள்ளையார் கதை, விநாயக புராணம் போன்ற புராண படலம் கேட்க வேண்டும்.

படலம் வாசிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் விநாயகப்பெருமானின் பூரண ஆசிகள் கிடைக்கும்.

விரதம் அனுட்டிப்பவர்கள் எதனை நினைத்து விரதம் நோற்கின்றார்களோ அதற்குரிய பயனைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

யாழ்ப்பாணம்- சுன்னாகம் வரத பண்டிதரால் இயற்றப்பட்ட பிள்ளையார் கதை எல்லா ஆலயங்களிலும் படிப்பது வழக்கம்.

விநாயகர் வழிபாடு

விநாயகரை வழிபடும் முறையில் அவருக்கு மூன்று தரம் தலையில் குட்டி தோப்புக்கரணம் போடும் முறை வழக்கத்தில் உள்ளது. இதற்கு புராணக் கதைகள் உண்டு.

ஒருமுறை இந்திரன் மழை இல்லாமல் பூஞ்சோலை வாடுவதைக் கண்டு மனம் வருந்தினான். விநாயகரை வேண்டி வழிபட்டான். பூசை செய்வதற்கு மலர்கள் இல்லையே என்று மனம் வருந்தினான்.

அப்பொழுது அகத்தியர் அங்கு வந்தார். தான் கொண்டுவந்த கமண்டலத்தை அருகில் வைத்து விட்டு அமர்ந்தார். பிள்ளையார் இந்திரனுக்கு இரங்க நினைத்தார்.

பிள்ளையார் ஒரு காகமாக வடிவெடுத்தது வந்து அகத்தியரின் கமண்டலத்தில் அமர்ந்து காலால் உந்தி விட்டு மீண்டும் பறந்து சென்றார்.

அகத்தியருக்கு கோபம் வந்துவிட்டது. கமண்டல நீர் காவிரியாக பெருக்கெடுத்து ஓடியது. காகத்தை சிறிது தூரம் அகத்தியர் துரத்தி சென்றார். காகம் சிறுவனாக மாறியது. சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார். சிறுவன் தனது உருவத்தை மாற்றி விநாயகராக தோற்றமளித்தார்.

அகத்தியர் திகைத்தார். சிறுவன் என நினைத்து உங்களை குட்ட வந்தேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று அகத்தியர் கேட்க, விநாயகரும் அவரை மன்னித்தார்.

இன்று முதல் என்னை நினைத்து யார் மூன்று முறை தலையில் குட்டி வணங்குகின்றார்களோ    அவர்றிகள் அறிவும் செல்வமும் பெற்று வாழ்வர் என்று அருளினார்.

அன்று முதல் மூன்று முறை தலையில் குட்டி விநாயகரை அனைவரும் வழிபடத் தொடங்கினார்.

அதுபோலவே தோப்புக்கரணம் போடுவதற்கும் ஒரு புராண வரலாறு உண்டு. கஜமுகன் எனும் அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான்.

அவர்களை அடிமைகளாக்கி தன் முன் ஆயிரம் முறை தோப்புக்கரணம் போடச் செய்தான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர்களின் செருக்கை அடக்க விநாயகரை அனுப்பினார்.

விநாயகர் கஜமுகாசுரனுடன் போர் புரிந்து அவனது உடலைப் பிளந்தார். அவன் பெருச்சாளி உருவெடுத்து விநாயகரை எதிர்த்தான்.

விநாயகர் அவனுக்கு ஞான உபதேசம் வழங்கினார். கர்வம் அடங்கி விநாயகரைத் தொழுதான். பெருச்சாளியை அவர் தனது வாகனமாக்கினார்.

தேவர்கள் கஜமுகாசுரனை தோப்புக்கரணம் போட்டு வணங்கியதை நினைத்து விநாயகருக்கு ஆயிரம் முறை தோப்புக்கரணம் போட்டார்கள்.

விநாயகர் மூன்று முறை தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று கூறி அவ்வாறு செய்யும் பக்தர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள் என்று அருளினார்.

விநாயகரை வழிபடும் போது தலையில் குட்டி வழிபடுவதும் தோப்புக்கரணம் போட்டு வழிபடுவதும் சிறந்த வழிபாடாகும்.

எனவே இந்த விநாயகர் சஷ்டி நாளில் விநாயகரை வணங்கினால் விக்கினங்கள் எல்லாம் தீரும். விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை போன்ற பாடல்களை ஓதி கணபதியை வணங்க காரிய சித்திகள் கைகூடும்.

இந்த வையகத்தில் அனைவரும் நோய் நீங்கி நலமுடன் வாழ ஐங்கரன் அருள் புரிவானாக..

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும்
நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

— (‪திருவிரட்டை_மணிமாலை‬)

(படம்: சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கோவில், பம்பலப்பிட்டி)