January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற ‘இலங்கை வம்சாவளி’ இளைஞர்

(படம்: உயிரிழந்த பொலிஸ் அதிகாரி)

தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தின் தடுப்பு அறையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் லண்டன் மாநகர பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

குற்றத்துடன் தொடர்புடைய நான்கு இடங்களில் சோதனை நடந்துவருகின்றது. பொலிஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் இலங்கை வம்சாவளி பின்புலத்தைக் கொண்டவர் என நம்பப்படுகின்றது. 23 வயதான அவர் ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கு அறிமுகமானவர்.

இஸ்லாமியவாத கடும்போக்கு சிந்தனைகளில் நாட்டம் கொண்டவராக அடையாளப்படுத்தப்பட்டவர் என்ற போதிலும் அவரிடம் அச்சப்படும் அளவுக்கு எதுவும் உறுதியாகி இருக்கவில்லை.

எனினும் பயங்கரவாதத்துடன் தொடர்புபடக்கூடிய கோணத்தில் ஆரம்பகட்ட விசாரணைகள் அமையவில்லை என்றே தோன்றுகின்றது. அவரது மனவளர்ச்சி பற்றியும் பொலிஸார் விசாரணையில் கவனத்தில் கொண்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞரை சோதனையிட்ட பொலிஸார், போதைப் பொருளும் துப்பாக்கி ரவைகளும் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

அவரை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்று உலோகங்களை கண்டறியும் கருவி (metal detector) மூலம் சோதனையிட முயன்றபோது, சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியின் மார்பில் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் மோசமாக காயமடைந்த மெட்டியு ரட்டானா என்ற 54 வயதான பொலிஸ் சார்ஜன்ட் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அத்தோடு தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் கழுத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் உள்ள சந்தேகநபரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிய முடிகின்றது.

கைகள் பின்னால் விலங்கிடப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

பாதுகாப்பான ஒரு இடத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருப்பது பல மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்றபடுத்துள்ளது. சம்பவம் நடந்த அறையின் சிசிடிவி கேமரா, பொலிஸ் அதிகாரிகளின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் போன்றவற்றின் பதிவுகளை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

சந்தேகநபரின் நோக்கத்தை அறிவதற்காக பல கோணங்களிலும் விசாரணைகள் நடந்துவருகின்றன.