January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மீனவர்களை விடுவிக்க வேண்டும்”: தமிழக முதல்வர் வலியுறுத்தல்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை அனுப்பி இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்தக் கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் சங்கம் முதலமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ள நிலையிலேயே அவர் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து 5 தடவைகள் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி தற்போது 94 படகுகள் இலங்கை வசம் இருப்பதாகவும், இவற்றை மீட்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர், மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.