May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் திரையுலகின் கேப்டனுக்கு 70 வயது!

தமிழ் திரையுலகின் கேப்டனாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.

அவர் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி,மதுரை திருமங்கலத்தில் பிறந்தவர்தான் விஜயராஜ் என்ற விஜயகாந்த்.

தனது பள்ளிப்படிப்பை பத்தாம் வகுப்புடன் நிறுத்திக்கொண்ட விஜயகாந்த் தமிழ் சினிமா மீது கொண்ட தீராத காதலால் சென்னை நோக்கி பயணமானார்.

1978 இல் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ், ‘இனிக்கும் இளமை, படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

முதல் படமான இனிக்கும் இளமை அவருக்கு போதிய திருப்தியை அளிக்கவில்லை ,அடுத்தடுத்த படங்களும் அவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை, இருந்தபோதிலும் தொடர்ந்து சோர்ந்து போகாமல் புதிய படங்களில் தனக்கான ஒரு முத்திரையை பதிக்க கடும் முயற்சிகளை எடுத்தார்.

அதன்பின்னர் நீண்ட முயற்சிக்குப் பின்னர் அவர் நடித்த தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை கே.விஜயன் இயக்க சலீல் சவுத்ரி இசையமைத்திருந்தார்.

இதனை அடுத்து இயக்குனர் எஸ் . ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடித்த சட்டம் ஒரு இருட்டறை ,மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை விஜயகாந்திற்கு பெற்றுக்கொடுத்தது.

இதன் பின்னர் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் பல மொழிகளில் ரீ-மேக் செய்தும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இயக்குனர் ராம.நாராயணன் இயக்கிய சிவப்பு மல்லி , திரைப்படமும் வெளியாகி விஜயகாந்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்தியது .

இதனையடுத்தே விஜயகாந்த் தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

அப்போது 1980களில் தமிழ் திரையுலகில் ரஜினி ,கமல் கோலோச்சிய காலம் தான் அது.

ரஜினி ,கமலின் கால்ஷீட் கிடைக்காத அந்த நாட்களில் சிறு தயாரிப்பாளர்கள் முதல் பெரிய தயாரிப்பாளர்கள் வரை அடுத்து தேடியது கேப்டன் விஜயகாந்தைத் தான்.

வெற்றி ,தோல்வி என சென்றுகொண்டிருந்த விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது
இயக்குனர் மணிவண்ணனின் நூறாவது நாள் திரைப்படம்.

அந்தக் காலம் முதல் தொட்டே கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, படங்களைத் தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகர் விஜயகாந்த் அதுவே பிற்காலத்தில் அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்தது

அப்போது ஒரு வெற்றிக் கதாநாயகனாக பார்க்கப்பட்ட விஜயகாந்த் சற்றும் மனம் தளராமல் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த ஊமை விழிகள் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தார். என்னதான் கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும் தனக்கான கதை வலுவாக இருந்ததால் அதில் நடித்து அப்படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து ஊமைவிழிகள் இயக்குனர் அடுத்தடுத்து இயக்கிய உழவன் மகன் ,செந்தூரப்பூவே போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்துக்கு மிகப்பெரும் வெற்றியைத் தேடித் தந்தது இந்த திரைப்படங்கள்.

இதனை அடுத்து 1990களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ,அசைக்க முடியாத ஒரு கதாநாயகனாக வலம் வரத் தொடங்கினார் விஜயகாந்த்.
அம்மன் கோயில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் விஜயகாந்தை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தி மக்களிடையே கொண்டு சேர்த்தது.

அதன்பின்னர் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் ,ஆர்கே செல்வமணி இயக்கத்தில் புலன்விசாரணை, ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்தன.

தொடர்ந்து,ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில்,ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் , லியாகாத் அலிகான் வசனங்களில் உருவானதுதான் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன்.

இதன்பின்னரே விஜயகாந்த் கேப்டன் என தமிழ் மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட தொடங்கினார்.

கேப்டன் பிரபாகரன், விஜயகாந்தின் நூறாவது படம் என கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடி மிகப்பெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்திற்குப் பிறகு அதிரடியான போலீஸ் வேடங்களில் நடிக்க தொடங்கினார் விஜயகாந்த்.

மாநகர காவல் ,சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட் ராஜா போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டியிருந்தார் விஜயகாந்த்.
தொடர்ந்து 1990இல் திருமண பந்தத்தில் இணைந்த அவர் தொழிலதிபரின் மகளான பிரேமலதாவை திருமணம் செய்கிறார்.

அவர் சினிமாவை தாண்டி , தீவிர ஐயப்ப பக்தராகவும் இருந்திருக்கிறார். தொடர்ந்து 18 வருடங்கள் சபரிமலை ஐயப்பனை சென்று தரிசனம் செய்து வந்திருக்கிறார்.

இடையில் சில பல காரணங்களால் சபரிமலைக்குச் சொல்வதை நிறுத்திக் கொண்டார் விஜயகாந்த்.

இதன் பின்னர் 1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் நடிகர் சங்க கடனை அடைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமா மீண்டும் ஏனைய மொழி சினிமாக்களுக்கு ஈடாக வளரத் தொடங்கியது.

2001 ஆம் ஆண்டில் சிறந்த இந்தியக் குடிமகன் விருதை ,ஐநா மனித உரிமை கமிஷனின் அப்போதைய தலைவர் பிஎன் பகவதி கையால் டெல்லியில் வைத்து பெற்றுக் கொண்டார் நடிகர் விஜயகாந்த் .

இன்றும் தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள திரையரங்குகளில் நடிகர் விஜயகாந்தின் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்படும் போது மிகப் பெரிய அளவில் வசூலை பெற்று கொடுக்கும் என்பது திரையரங்க உரிமையாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

திரைத்துறையை தாண்டி விஜயகாந்த் செய்துள்ள சாதனைகளும், எளிய மக்களுக்கு அவர் செய்த உதவிகளும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என சொல்லலாம்.

அதனால்தான் இன்றளவும் தமிழக மக்கள் கேப்டன் விஜயகாந்துக்கு ஒரு இடத்தை கொடுத்து அரசியலில் இன்றும் முன்னணி கட்சியாக திகழ்கிறது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியலில் இருந்து சற்று ஓய்வெடுத்து வருகிறார் கேப்டன் விஜயகாந்த்.

70 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜயகாந்தை அவரது சக சினிமா நண்பர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர் .சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு உள்ளார்கள்.

கேப்டன் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் ,இந்தப் பிறந்தநாளில் மேலும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துவோம்.