January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆந்திராவில் கன மழைக்கு இதுவரை 43 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் கன மழை, வெள்ளப் பெருக்கில் சிக்கி இது வரை 43 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகொப்டரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது.

அப்போது சென்னைக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர், பிரகாசம் ஆகிய 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.

இதில் கடப்பா மாவட்டம், சேயேரு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றச் சென்ற 2 கிராம மக்களில் 26 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பலர் தங்கள் குடும்பத்தாரை காணவில்லை என காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர்.

திருப்பதியில் கல்யாணி அணை நிரம்பியதால் இரு மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது .

பல பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை மற்றும் நடைபாதை மழை வெள்ளத்தில் சிக்கியதால் சேதம் அடைந்திருக்கிறது.திருப்பதி நகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

திருப்பதி மலைகளின் மேல் போக்குவரத்து தடைப்பட்டு இருப்பதால்,பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

ஆந்திராவில் உள்ள முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும், கனமழை காரணமாக சில அணைகள் உடைந்ததாலும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அதேபோல் கனமழை வெள்ளத்தில் அடுக்குமாடி வீடு, குடியிருப்புகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.