இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் குழு, முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி – சமூகப் பாதுகாப்பு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை, இலங்கைக்கு விரும்பிச் செல்லுதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிச் செயல்படும் என்று தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தற்போது இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாக இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், பொதுத்துறைச் செயலாளர், மறுவாழ்வுத்துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார் .
அதன்படி, இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.