January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதலமைச்சர் அறிவிப்பு

நவம்பர் 1 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 வீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திரையரங்குகளை முழுமையாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் தீபாவளியையொட்டி வெளியிடப்பட இருக்கின்றன.இதனால் திரையரங்குகள் நிரம்பி வழிய வாய்ப்பிருக்கிறது.

மேலும் அனைத்துவகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் இனி முழு நேரம் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா தவிர்த்த அனைத்து மாநிலங்களுக்கிடையே நூறு வீத இருக்கைகளுடன் குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் திகதி முதல் பள்ளிகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தனித்து இயங்கும் மதுக்கூடங்கள் உட்பட அனைத்து வகையான மதுக்கூடங்களும் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு பயிற்சி நிலையங்கள் 100 வீத பயிற்சி பெறுவோருடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொலைக்காட்சி மற்றும் சினிமா உட்பட அனைத்து படப்பிடிப்புகளும் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் பண்டிகை காலம் என்பதால் பொது நிறுவனங்களும், வணிக நிறுவனங்களுக்கும் இயங்க முழுமையான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.