January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய – சீன பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

இந்தியா – சீனா இடையேயான 13 ஆவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பேச்சுவார்த்தையில் எல்லையில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தியா – சீனா இராணுவ கொமாண்டர்களின் 13 ஆவது கூட்டம், சுசூல் – மோல்டோ எல்லையில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

சீன தரப்பினர் இருதரப்பு ஒப்பந்தங்களை மீறியதாலும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிரச்சினை எழுந்ததாக இந்திய தரப்பினர் சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளனர்.

அண்மையில் துஷான்பே நகரில் இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய கூட்டத்தில் எல்லையில் மீதமுள்ள பிரச்சினைகளை தீர்க்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

அவர்களின் வழிகாட்டுதலின் படி பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அப்போதுதான் இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்படும் என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளை தீர்க்க இந்திய தரப்பு ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை சீனா ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

அதனால் இந்த பேச்சுவார்த்தை எல்லை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் நிறைவடைந்தது

ஒட்டுமொத்த இருதரப்பு உறவைக் கருத்தில் கொண்டு, பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண, சீனா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.