January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தியாகிகளாக புகழ்கிறது’: ஐ.நா கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

உலகளாவிய பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தியாகிகளாகப் போற்றுகிறார் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தில், ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் உட்பட இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக ஐநாவுக்கான இந்திய நிரந்தர ஆலோசகர் அமர்நாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஜம்மு -காஷ்மீரின் முழு நிலப்பரப்பும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் என்பதை ஐ.நா சபையில் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதாக இந்தியாவின் நிரந்தர ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஆலோசகர், ”பாகிஸ்தான் பிரதிநிதி அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி இங்கு பேசுகிறார், ஆனால் பிரதமர் இம்ரான் ஒசாமா பின்லேடன் போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாக போற்றுகிறார்” என சாடியுள்ளார்.

மேலும், பல இடங்களில் இந்தியா குறித்து பாகிஸ்தான் பொய்களைப் பரப்புவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்வது அவமதிப்புக்கு உரியது என இந்திய பிரதிநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அத்தோடு இந்திய விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.