July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கான் விவகாரம் தொடர்பில் சவூதி அமைச்சருடன் இந்திய மத்திய அமைச்சர் பேச்சு!

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சவூதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல்சாத், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் இரு தரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,சவூதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று (20) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து  பேசுகிறார்.

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டின் வளர்ச்சி குறித்து உலக நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில், சவூதி வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றுவதற்கு முன்னரே அங்கு அமைதியை நிலை நாட்ட ஈரான் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ஆப்கானில் அமைந்துள்ள புதிய அரசை அங்கீகரிப்பது குறித்து உலக நாடுகள் கூட்டாக சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.