Photo: BCCI,ICC
டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ நேற்று அறிவித்தது.
விராட் கோலி தலைமையிலான அணியில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பாண்ட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.பி.எல்.லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார், இஷான் கிஷன் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சகலதுறை வீரர்களான ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. ஆனால், க்ரூணால் பாண்டியாவிற்கு இடம் கிடைக்கவில்லை.
சுழல்பந்து வீச்சாளர்கள் வரிசையில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அத்துடன், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் டி-20 இந்திய அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
அதேபோல்,ராகுல் சாஹர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ சுழல்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இது இவ்வாறிருக்க, வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளதுடன், தமிழக வீரரான நடராஜன் உபாதையிலிருந்து பூரண குணமடையாததன் காரணமாக அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இதனிடையே, மேலதிக வீரர்களாக ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ் டோனியை கௌரவப்படுத்தும் விதமாக, டி-.20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியின் ஆலோசகராக பி.சி.சி.ஐ நியமித்துள்ளது.
ஐ.சி.சி. இன் 7 ஆவது டி-20 உலகக் கிண்ணத் தொடர் அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய அணி விபரம்:
விராட் கோலி (தலைவர்), ரோகித் சர்மா (உப தலைவர்), லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பாண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், மொஹமட் ஷமி