November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை  இரத்துச் செய்ய வேண்டும்”: தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம்!

இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை  இரத்துச் செய்ய வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீா்மானம், தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டப் பேரவையில் நேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டம் – 2019ஐ மத்திய அரசு இரத்து செய்ய வேண்டுமென தனித் தீா்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.

அதன்போது உரையாற்றிய அவர், குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூா்வமான உரிமையாகும். இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும், எந்தக் குடிமகனுக்கும் சட்டப்படியான சமத்துவம், அனைவருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு மறுக்க முடியாது என்றார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சாா்பற்ற அரசு என்கிறது. அதன்படி பாா்க்கும்போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிா்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, அகதிகளாக வருபவா்களைச் சக மனிதா்களாகப் பாா்க்கவேண்டும். மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவா்கள் என்ற ரீதியிலோ அவா்களைப் பிரித்துப் பாா்க்கக்கூடாது என்பதுதான் சரியான பாா்வையாக இருக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இலங்கைத் தமிழா்கள் வஞ்சிக்கப்படுகிறாா்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தைச் சோ்ந்தவா்களெல்லாம் வரலாமென்றால், இலங்கையைச் சோ்ந்தவா்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கைத் தமிழா்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறாா்கள். அவா்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவா்கள். இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவா்கள். அவா்களின் உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறானதாக மத்திய அரசின் சட்டத் திருத்தம் உள்ளது.  இந்திய மக்களிடையே பேதத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத் திருத்தம் தேவையற்றது. அதனால் அது இரத்து செய்யப்பட வேண்டியது என கருதுகிறோம் என்றார்.

முதல்வரின் உரையைத் தொடர்ந்து, அவரின் தீா்மானம் குறித்து பேரவைத் தலைவா், குரல் வாக்கெடுப்பை நடத்தினாா்.

அதன்போது பேரவையில் இருந்த அனைவரும் ஆதரித்து குரல் கொடுக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவ்வேளையில், அதிமுக உறுப்பினா்கள் யாரும் அங்கு இருக்கவில்லை என்பதுடன், தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்திருந்தது.