November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவானி தங்கம் வென்று சாதனை

டோக்கியோ பாராலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்கின்றுள்ளனர்.

பெண்களுக்கான 10 மீட்டர் எயார் ரைபிள் இறுதிப் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் போட்டியிட்ட இந்தியாவின் அவானி லெகாரா, 249.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றதுடன், உலக சாதனையையும் சமன் செய்தார்.

இது பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் தங்கப் பதக்கமாகும்.

இதன்படி பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 19 வயதான அவானி லெகாரா பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் சீனாவின் க்யூபிங் ஜாங் 248.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், யுக்ரைன் நாட்டின் இரினா 227.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.