November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரூ.39 கோடி செலவில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும்; முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

(FilePhoto)

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் கீழ் இதனை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும் எனவும், அரைநூற்றாண்டு காலத்துக்கு தமிழ்நாட்டின் நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

அத்தோடு நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்.

தேர்தலில் எல்லாம் வென்றவர் கருணாநிதி, 13 சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் தலைகுனியாதவர் என ஸ்டாலின் பெருமிதப்படுத்தியுள்ளார்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை கொடுத்தவர், அவர் இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி எனவும் சட்டப் பேரவையில் புகழ்ந்துள்ளார்.

இதேவேளை, தமிழக முதலமைச்சரின் அறிவிப்புக்கு, சட்டப் பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி என ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.

தனது தந்தை தீவிர கருணாநிதி ரசிகர் எனவும், அவர் பெட்டியில் எப்போதும் கலைஞரின் பராசக்தி, பட வசனப் புத்தகம் இருக்கும் என ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.