தமிழகத்தில் மேலும் இரு வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
அத்துடன் செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாக இருக்கிறது.செப்டம்பர் 1 முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
உரிய வழிகாட்டுதலுடன் பள்ளி,கல்லூரிகள் செயல்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.வரும் 23ம் திகதி முதல் உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் படகு இல்லங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடற்கரைகளில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 23 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயக்க அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செப். 1 முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கன்வாடி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகளில் மதிய உணவு திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயர் வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.
அனைத்துக் கல்லூரிகளும் செப். 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் கொரோனா பாதுகாப்புடன், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயலாற்ற தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.