மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தொடர்புடைய கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (18) மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்காக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூடியது.
இதன்போது, இன்றைய கூட்டத்திற்கு அ.தி.மு.க.வினர் சட்டப் பேரவைக்குள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்திருந்தனர்.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டதற்கு சபாநாயகர் மு.அப்பாவு அனுமதி அளித்ததும், கொட நாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மறு விசாரணை செய்வது எதற்கு? என எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
அதற்கு பதிலளித்து பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின்,
இந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல அ.தி.மு.க.வினர் செயல்படுகின்றனர் என சட்டப் பேரவையில் விமர்சித்திருக்கிறார்.
இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடும் இல்லை எனக் கூறியுள்ள தமிழக முதலமைச்சர், நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக் கொண்டு வரப்படும் என சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்துக் கொண்டிருக்கையில் , தி.மு.க.வினர் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதேவேளை “பொய் வழக்கு போடும் தி.மு.க அரசை கண்டிக்கிறோம்” என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தியவாறு வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர், கலைவாணர் அரங்கு வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கொடநாடு எஸ்டேட் என்பது தமிழ் நாட்டின் மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய தோட்டமாகும்.
இந்தத் தோட்டம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கொட நாடு தோட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் 1992 ஆம் ஆண்டு 17 கோடிக்கு வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் மொத்த மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலகட்டங்களிலும் அவ்வப்போது இந்த எஸ்டேட் சென்று ஓய்வு எடுப்பது ஜெயலலிதாவின் வழக்கம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த கொட நாடு எஸ்டேட் கொலை ,கொள்ளை , மரணங்கள் என சர்ச்சையில் சிக்கியது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் அவரின் தோழியான சசிகலா 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் திகதி, கொட நாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
மேலும் அந்த எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி பொலிஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்ததால், பொலிஸார் அவரை தேடி வந்தனர்.
அதனை அடுத்து 2017 ம் ஆண்டு ஏப்ரல் 28 ம் திகதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
மேலும், கொட நாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார் எனவும் தகவல் வெளியானது.
இவ்வாறு அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்ந்ததால், பெரும் பரபரப்புக்கு காரணமானது இந்த கொட நாடு எஸ்டேட் வழக்கு.