July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்கக் கோரும் நளினியின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினி தாக்கல் செய்த வழக்கை 4 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் கைதிகளாக உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய அதிமுக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது.

கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு இன்னும் முடிவு எட்டப்படாக நிலை தொடர்கிறது.

இந்த தீர்மானத்தின் மீது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு நளினி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நளினி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2000 ஆம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த பின்னர், 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்க வேண்டும் எனவும் நளினி மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது விசாரணைக்கு வந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.