இந்தியாவில் ஜனநாயகம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஒரே நோக்கத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற மம்தா பானர்ஜி ஐந்து நாள் பயணமாக டெல்லிக்கு பயணமாகியுள்ளார்.
இதன்போது, பிரதமர் உள்ளிட்ட முக்கிய எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்த அவர், தனது பயணத்தை முடித்துக் கொண்டு தனது மாநிலத்திற்கு திரும்பியுள்ளார்.
இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, கமல்நாத், அபிஷேக் சிங்வி, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசியுள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் ஐந்தாம் நாள் நிறைவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
டெல்லி பயணம் வெற்றிகரமாக அமைந்ததாகவும், இந்த அரசியல் பயணத்தில் தன்னுடைய சகாக்கள் பலரையும் சந்தித்து பேசியதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஜனநாயகத்தையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிய அவர், அது தொடர்பான பல அரசியல் ரீதியான விடயங்கள் பேசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இனிமேல் 2 மாதங்களுக்கு ஒருமுறை டெல்லி வரப்போவதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தான் தொடர்ந்து ஆதரவாக இருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சிகள் ஒன்று சேருவதை தவிர வேறு சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.