November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறுவயதில் தேநீர் விற்ற ரயில் நிலையத்தை புதுப்பித்து திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தேநீர் விற்ற ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

குஜராத் மாநிலத்தின் மெஹசானா மாவட்டத்தின் வாட்நகரில் பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் தேநீர் விற்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது.

இந்நிலையில் தான் தேநீர் விற்ற வாட்நகர் ரயில் நிலையத்தை புதுப்பித்து திறந்து வைக்கவுள்ளார் பிரதமர் மோடி.

இந்த குஜராத் வாட் நகர் ரயில் நிலையம் பாரம்பரிய வளையத்தில் அமைந்திருப்பதாகவும் சுமார் 8.5 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்திற்கு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி தமது அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைக்கவுள்ளார்.

சுமார் 14 ஆண்டுகாலம் குஜராத்தில் முதலமைச்சராக மோடி பணியாற்றியுள்ள நிலையில், தற்போது குஜராத் சிறந்த ஒரு தொழில் துறையினருக்கான மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

அதேநேரம், ரயில்வே நிலையத்தைத் திறந்து வைக்கும் மோடி, குஜராத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

மேலும், காந்திநகர் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர விடுதியையும் தொடங்கி வைப்பதோடு காந்திநகரிலிருந்து வரேதா வரை செல்லும் புறநகர் பயணிகள் ரயிலையும் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

புகழ்பெற்ற தரங்கா மலையின் அருகில் அமைந்துள்ளது வரேதா ரயில் நிலையம். இது புனிதத் தலமாகவும், பிரபல சுற்றுலாதலமாகவும் இருக்கிறது.

இந்த பாதையில் அமைந்திருக்கும் முக்கிய ரயில்நிலையத்தில் வாட்நகரும் ஒன்றாகும். வாட்நகர் ரயில்நிலையத்தில் தான் பிரதமர் மோடியின் தந்தையான தாமோதரதாஸ் மோடி ஒரு தேநீர் கடை நடத்தி வந்துள்ளார்.

அந்த தேநீர் கடையில் தனது சிறுவயதில் பிரதமர் நரேந்திர மோடி ,தந்தைக்கு உதவி வந்துள்ளார்.

இதனால் வாட்நகர் ரயில் நிலையம் தற்போது அதிக பிரபலமாகியமை குறிப்பிடத்தக்கது.