ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளதால் இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற கொண்ட அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.
இதன்போது அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன் கொரோனாவுக்கு எதிரான போரில் மனநிறைவுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய மோடி இந்தியாவுக்குக் கூட இது எச்சரிக்கையாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது கவலைக்குரியதாகவும் செய்யும் சிறிய தவறு கூட இந்தியாவுக்கு நீண்ட காலத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கொரோனாவுக்கு எதிரான போரில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஏனைய தன்னார்வலர்கள் மூலமாக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் இருந்தபோதிலும் பொது மக்கள் முகக்கவசம் இன்றியும் சமூக விலகலை கடைபிடிக்காமல் பொது இடங்களில் நடமாடுவதை காண முடிவதாக பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் நிர்வாகத் திறமையையும், புத்திசாலித் தனத்தையும் சிறப்பாக செயல்படுத்தி, நாட்டின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் கிடைக்குமாறு சேவையை உன்னதமாக செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.