November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு 9 ஐரோப்பிய நாடுகள் அனுமதி!

இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஐரோப்பாவில் உள்ள 9 நாடுகள் அனுமதி அளித்துள்ளன.

அதேநேரம், இரண்டு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் 9 நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்கலாம் என்றும், அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, ஒஸ்திரியா, ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவேனியா, கிரீஸ் ஆகிய நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளதுடன் அந்த நாடுகளுடன் எஸ்டோனியாவும் அந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில் 9 நாடுகளும் தங்களின் ஆட்சிக்கு உட்பட்டுத்தான் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூறியுள்ள ஜெர்மன் நாட்டு தூதுவர் வால்டர் ஜே லிண்ட்னர், இந்தியாவின் கோவிஷீல்ட் இரு டோஸ்களையும் செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழை வைத்திருந்தால் அதனை முழுமையாக ஜெர்மனி ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் இருப்பதால், அங்கிருந்து வரும் மக்களுக்கு விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்ய கிரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று முதலாம் திகதி முதல் செயல்படுத்தியுள்ளது.

இதன்படி, ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் அளித்த 4 தடுப்பூசிகளைச் செலுத்திய மக்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடையின்றி பயணிக்க முடியும்.

இல்லாவிட்டால், 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலின் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது உறுப்பு நாடுகள் சில கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.