January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மூன்று குரங்கு சின்னங்களைப் போல இருக்க முடியாது’ :மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு மசோதாவுக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு!

சினிமா, ஊடகம் மற்றும் கல்வி எப்போதுமே இந்தியாவின் ‘மூன்று குரங்குகளாக’ இருக்காது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு ஒளிப்பதிவு துறைக்கான புதிய சட்ட வரைவு மசோதா 2021-ஐ வெளியிட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவை பொது மக்களின் கருத்திற்காக வெளியிட்டுள்ள மத்திய அரசு, ஜூலை 2 ஆம் திகதி மக்களின் பார்வைக்காக இருக்குமெனவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் கமல்ஹாசன் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, கண், வாய், காதுகளை அடைத்து கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும் எனவும், இந்த 2021 ஒளிப்பதிவு சட்ட திருத்தத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒளிப்பதிவு சட்ட திருத்தம் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பரவலாக பேசப்படுவதுடன், இந்த சட்ட திருத்த மசோதா கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறி விடும் என சினிமா துறையை சேர்ந்த வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேநேரம், இந்த ஒளிப்பதிவு சட்ட மசோதா கட்டுப்பாடுகள், சில திருத்தங்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.