July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்க புதிய திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய  பொருளாதாரத்தை மீட்டெடுக்க 8 புதிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (28) அறிவித்துள்ளார்.

அதேநேரம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு 1.1 இலட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத  திட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலைக்கு பின்னர் இயல்பு வாழ்க்கை சற்று மீண்டு வரும் நிலைமையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

கொரோனா முதல் அலை முடிவுற்ற நிலையில், இரண்டாம் அலை தொடங்கியதில், பல்வேறு தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில், சுற்றுலாத்துறை உட்பட பல துறைகள் முடங்கியது.

இந்நிலையில், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் மீண்டெழுந்து வரும் வகையில் ரூ.1.1 இலட்சம் கோடி கடன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதற்கமைய 8 பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும், அதில் 4 திட்டங்கள் புதியவை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அவசர கால கடன் வசதியாக தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 இலட்சம் கோடி கடன் வழங்கப்படும் எனவும் அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலமும் தொழில் துறைக்கு கடனுதவி வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறையை சார்ந்தவர்கள் தங்கள் கடனை செலுத்தவும், தொழிலை மீண்டும் தொடங்கவும் கடனுதவி வழங்கப்படும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், 5 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

7.95 சதவீத வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமுலில் இருக்கும் எனவும், பிற துறைகளுக்கான கடனுக்கு வட்டி 8.25 சதவீதமாக இருக்கும் எனவும் மற்ற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.