இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியை சுற்றுலாத் தலமாக்குவதற்காக பாரிய அளவிலான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அயோத்தியில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைத்து அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதால் அயோத்தி நகரம் முழுவதும் சுற்றுலாத் தலமாக மாறி வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பல நாடுகள் அயோத்தியில், தமது நாட்டு மக்களுக்காக தங்கும் விடுதிகளை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதை வரவேற்கும் வகையில் பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநில அரசும் , தங்கும் விடுதி கட்ட அனைவருக்கும் குறைந்த விலையில் நிலம் ஒதுக்க தொடங்கியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தங்கும் விடுதி கட்டும் முனைப்பில் இலங்கை, மலேஷியா, நேபாளம், மொரீஷியஸ், கென்யா, பிஜி, தாய்லாந்து, இந்தோனேஷியா, கொரியா மற்றும் கனடா உள்ளிட்ட வெளிநாடுகள் முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்தும் நிலம் கேட்டு மனு கொடுத்துள்ளதுடன், ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை, காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி மடம், ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு உள்ளிட்ட அமைப்பினர் சிலரும் அயோத்தியில் இடம் கேட்டிருக்கிறார்கள்.
அயோத்தியில் வெளிநாடுகளுக்கும் , வெளி மாநிலத்தவர்களுக்கும் தங்கும் விடுதி அமைக்க உத்தர பிரதேச அரசு சார்பில் சுமார் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காசி ,வாரணாசி, மதுரா, அயோத்தி ராமர் கோயில் என ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய தலங்கள் காணப்படுகின்றன.