November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; பிரதமர் மோடி

1947 இல் இந்தியா விடுதலை அடைந்தபோது சில சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேராமல் தனிநாடாக செயல்பட்டன.

இதற்கு உதாரணமாக பூட்டான், நேபாளம் போன்ற நாடுகளைச் சொல்லலாம். இதைப்போலவே ஜம்மு-காஷ்மீர் தனியாக செயல்பட விரும்பியது.

ஆனால் இந்தியாவில் இருந்து பிரிந்து போன பாகிஸ்தான் அங்கு ஆக்கிரமிப்புகளை செய்யவே ஜம்மு காஷ்மீர் சில நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் இணைந்து கொண்டது.

அதன்படி ஜம்மு காஷ்மீர் மக்களை தவிர வேறு யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது. மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாமல் அங்கு சட்டமாக்கி கொள்ளமுடியும் என்பது போன்ற சில சிறப்பு சலுகைகளுடன் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

இருப்பினும் சண்டையில் பாகிஸ்தானிடம் இந்தியா விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று தேசியவாதிகளும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் இப்போதிருக்கும் ஜம்மு-காஷ்மீர் இரண்டையும் இணைத்து தனிநாடாக செயல்படவேண்டும் என்று ஒரு பிரிவினரும், பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமென்று இன்னும் சில அமைப்பினரும் செயல்பட்டதால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல அங்கு சராசரி வாழ்க்கை இல்லாமல் போனது.

பாகிஸ்தான் ஆதரவில் ஆயுதப் பயிற்சி பெற்ற குழுக்கள் பாகிஸ்தானில் இருந்த ஏனைய பிரிவினைவாதிகள் மற்றும் இந்திய ஆதரவு தலைவர்கள் என அங்கு அரசியல் ரீதியாக போராட்ட களமாகவும் ,இயக்கங்கள் ரீதியாக வன்முறை மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இதனால் அங்கு அமைதி நிலைநாட்ட இராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு சில சட்டதிட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன.

இருப்பினும் பிரச்சினை அதிகரித்துக்கொண்டு சென்றதே தவிர, தீர்வு எட்டப்படவில்லை.

60 வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்தியில் பொறுப்பேற்ற காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அல்லாத பல அரசுகள் முயற்சி செய்தபோதும் ஒரு தீர்வும் எட்டப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ஆளும் மத்திய பிஜேபி அரசு 2019 ஆகஸ்ட் 5ல் அதிரடியாக ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக அதாவது யூனியன் பிரதேசமாக ஜம்மு மற்றும் லடாக் என்று இரண்டாக பிரித்தது.

மத்திய அரசின் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படாமல் இருந்த சட்டசபை கலைக்கப்பட்டது. ஏனைய மாநிலங்களில் இருப்பதை போன்றே ஒரு இந்தியர் இந்தியாவில் எந்த மாநிலங்களில் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் தொழில் செய்யலாம் மற்றும் இந்திய பாராளுமன்றத்தின் அனைத்து சட்டங்களும் செல்லுபடி ஆகும் என்று அங்கு முன்னர் நிலவிவந்த சிறப்பு சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

இருப்பினும் அங்கு சரியான சமயத்தில் மாநில அந்தஸ்து தரப்பட்டு சட்டமன்றம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது .

இந்த நிலையில் மீண்டும் ஜம்மு-காஷ்மீரில் சட்ட மன்றம் அமைத்து மாநில அந்தஸ்து வழங்குவதற்காக ஜம்மு மற்றும் லடாக் அரசியல் மற்றும் ஏனைய தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை நடத்தினார் .

இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா,பரூக் அப்துல்லா,குலாம் நபி ஆசாத், மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் இந்திய அரசு தரப்பில் பிரதமர்,உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டமானது ,ஒரு முற்போக்கான காஷ்மீரை உருவாக்குவதற்கான அடித்தளமாக இருந்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் விரைவில் சட்டசபை அமைக்கப்பட்டு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையான அரசு அங்கு அமைக்கப்பட்டு ஏனைய மாநிலங்களை போல் செயல்படும்.

இருப்பினும் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் கேட்பதை போன்று நிலம் மற்றும் மத்திய பாராளுமன்றத்திற்கு கட்டுப்படாத சட்டசபை தரப்படாது என்று தெரிகிறது.