January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்விக்கு இட ஒதுக்கீடு வேண்டும்’;ராமதாஸ்

தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கும் மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை  சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும் என அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ராமதாஸ்.

இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளின் மருத்துவக் கல்விக் கனவை தமிழக அரசு உடனடியாக நனவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு  குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமை கூட கடந்த 20 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் தந்தை நாடு என்று கூறிக் கொள்ளும் தமிழ் நாடு இந்த வாய்ப்பை கூட வழங்க மறுப்பது அநீதியாகும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

1980 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய அகதிகளின் வருகை 2009 ஆம் ஆண்டில் போர் முடிவடைந்த பிறகும் கூட நீடித்தது.

தமிழகத்தில் 108 அகதிகள் முகாம்கள் இருப்பதாகவும்,இந்த சிறப்பு முகாம்களில் 18,944 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களைத் தவிர முகாம்களுக்கு வெளியே தமிழகம் முழுவதும், 13,533 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

ஈழப் போரில் அனைத்தையும் இழந்து, தாயகத்திற்கு மீண்டும் செல்ல முடியாமலும், சென்றாலும் நிம்மதியாக வாழ முடியாத நிலையிலும் உள்ளவர்கள்தான் இன்னும் அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளனர் என அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

அவர்களின் ஒற்றைக் கனவு தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து வேலைவாய்ப்புக்கு  தகுதியுள்ளவர்களாக்கி விடவேண்டும் என்பது தான் என ராமதாஸ் விளக்கியுள்ளார்.

கலை மற்றும் அறிவியல், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் அவர்களுக்கு சாத்தியமாகிவிட்டாலும், மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அதற்கு காரணம் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்படாததுதான்.

கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதியான மதிப்பெண்களைப் பெற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாமல் ஏமாற்றமடைந்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஏராளம் என ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் செய்த ஒரே பாவம் ஈழத்தமிழ் அகதிகளுக்கு வாரிசுகளாக பிறந்தது தான். ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தாராளமாக வழங்கப்படுகின்றன.

ஆனால், ஈழத் தமிழர்களின் தந்தை நாடான தமிழ் நாட்டில் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவது அநியாயமாகும் என ராமதாஸ் கூறியிருக்கிறார்.

ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாக ராமதாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் கூட இதுவரை அக்கோரிக்கை நிறைவேறவில்லை என சாடியிருக்கிறார் ராமதாஸ்.

மருத்துவப் படிப்பில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல.

அது நிறைவேற்றப்படக்கூடாத ஒன்று அல்ல. ஆனால், அந்தக் கோரிக்கையை செயல்படுத்தும் அரசியல் துணிச்சல்தான் தமிழக ஆட்சியாளர்களுக்கு இல்லை.

1984 ஆம் ஆண்டில் ஈழத்தமிழ் அகதி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தலா 10 இடங்கள், சட்டம் மற்றும் வேளாண் படிப்புகளில் தலா 5 இடங்கள், பாலிடெக்னிக்குகளில் 20 இடங்களைச் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆணையிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார் ராமதாஸ்.

அதன்பின் 1989 ஆம் ஆண்டில் அகதி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து அப்போதைய முதல்வர் கலைஞர் விலக்கு அளித்தார். ஆனால், 1990 களின் தொடக்கத்தில் அகதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஒதுக்கீடுகளை நீதிமன்றம் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் பொறியியல் படிப்புக்கு மீண்டும் சிறப்பு ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டாலும் கூட மருத்துவக் கல்விக்கு மட்டும் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் அகதி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வழங்கப்படுவதில் பெரும்பான்மையான உதவிகள் ஈழத்தமிழ் அகதிகளுக்கும் வழங்கப்படுகிறது.

அவ்வாறு இருக்கும்போது மருத்துவக் கல்வி வாய்ப்பு மட்டும் மறுக்கப்படுவது எந்த வகையிலும் அறமல்ல.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளில் பெரும்பான்மையானோர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் வசிக்க விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத் தரப்படும் என்று 2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

அதை சாத்தியமாக்க நீண்டகாலம் ஆகலாம். ஆனால், ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வி பயில சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது சாத்தியமானதுதான். தமிழ்நாட்டில் இதை எவரும் எதிர்க்கவும் மாட்டார்கள்.

எனவே, தமிழ் நாட்டில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு குறிப்பிட்ட அளவு இடங்களை சிறப்பு ஒதுக்கீடாக ஒதுக்க வேண்டும்.

எத்தனை இடங்கள் என்பதை தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முடிவு செய்யலாம்.

இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈழத்தமிழ் அகதிகளின் வாரிசுகளின் மருத்துவக் கல்விக் கனவை  தமிழக அரசு உடனடியாக நனவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் நீண்ட அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.