யோகா இந்தியாவில் உருவானதல்ல, இந்தியா ஒரு நாடாகவே இல்லை என நேபாள பிரதமர் கேபி ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினம் நேற்று (22) கொண்டாடப்பட்ட நிலையில் நேபாள பிரதமர் இவ்வாறு உரையாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச யோகா தின நிகழ்வு கொண்டாடப்பட்டபோது, இந்த விடயம் தொடர்பாக மேலும் பேசிய நேபாள பிரதமர்,
‘யோகா இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல, நேபாளத்தில் உருவானது தான் யோகா எனவும் யோகா என்ற கலை உருவானபோது இந்தியா ஒரு நாடாகவே கருதப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல எனவும் , இந்தியா அப்போது பல பகுதிகளாக இருந்ததாகவும், நேபாளத்தில் உருவானதுதான் யோகா கலை எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு, நேபாளம் யோகாவை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த தவறி விட்டதாகவும் ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகாவிற்கு உரிமை கோரி சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
நேபாளத்தில் உள்ள யோகிகள், முனிவர்கள் குறித்து உலகுக்கு தெரிவிக்க தாம் தவறி விட்டோம், நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் ராமர் பிறந்தார் எனக் குறிப்பிட்டுள்ள நேபாள பிரதமர், சீதையும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர் தான் என விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே முனிவர் வால்மீகியும் நேபாளத்தில் தான் பிறந்தார், தற்போது இந்த வரலாறு மாற்றப்பட்டு விட்டது எனவும் கேபி ஷர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார்.