January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் சினிமாவின் ‘மாஸ்டர்’ தளபதிக்கு பிறந்தநாள்!

1992 இல் ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தில் விஜய் என்ற பெயரோடு சராசரிக்கும் சற்று குறைவான அழகோடு , வெறும் எஸ்.ஏ சந்திரசேகர் எனும் இயக்குநரின் மகன் என்ற அறிமுகத்தோடு மட்டுமே அறிமுகமானார் விஜய்.

முதல் படம் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கிறது. இன்றைக்கு இருப்பதை போல தொலைக்காட்சியில் நேரடி வெளியீடு,ஒடிடி வெளியீடு, போன்றவையும் அன்றைய காலகட்டத்தில் இல்லை.

அன்றைக்கு திரையில் வெளியாகும் முறை மட்டுமே இருந்தது. ரஜினியும், கமலும், விஜயகாந்தும் கோலோச்சிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் முதல் படத்தில் ஒரு நடிகர் புறம் தள்ளப்படுவது மிகப்பெரிய வேதனையாக இருந்தது.

அதற்குப் பிறகு அப்படி தோல்வி கண்ட நடிகரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது சந்தேகம்தான். ஆனாலும் விஜயின் தந்தைக்கு மட்டும் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.

ஏனெனில் நாளைய தீர்ப்பு சந்தையில் தோல்வியடைந்தாலும் கூட ஒரு இயக்குநருக்கு நடிகராக கேட்ட உணர்ச்சிகளை எல்லாம் போதுமான அளவு வெளிப்படுத்தினார் விஜய். இந்த நடிப்பு திறமை தந்தைக்கு ஒரு நம்பிக்கையை அளித்தது.

அந்த நம்பிக்கையில் இரண்டாவது படம் எடுக்கத் துணிந்தார். ஆனால் அவருக்கு போதுமான நம்பிக்கையும் விஜயை வைத்து படம் எடுப்பதற்கான பணமும் கிடைப்பதில் சிரமம் இருந்தது.

ஏனெனில் முதல் படமே வெளியில் கடன்பட்டு மிகப்பெரிய சிரமத்திற்கு இடையிலேயே அந்த படத்தை தயாரித்து இயக்கவும் செய்திருந்தார்.

இந்த முறை அவர் புது உத்தியைக் கையாள முடிவு செய்தார். முதல் படம் முற்றாக தோல்வி. படத்திற்கு பணம் தந்து உதவ சினிமா பைனான்சியர்கள் தயாராக இல்லை.

இந்நிலையில் விஜயகாந்தின் உதவியை நாடினார். ‘கேப்டன்’ என்ற பெயருக்கு உரித்தான விஜயகாந்தும் மறுபேச்சில்லாமல் கதையை கேட்காமல் கதையில் தான் நாயகன் இல்லை என்று தெரிந்த போதும் கூட சந்திரசேகருக்கு உதவும் பொருட்டு சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுக்க தயாரானார்.

இந்த சம்பவத்தை பற்றி எஸ்ஏ சந்திரசேகரும் ,விஜய்யும் பல மேடைகளில் நன்றி பெருக்க கூறியிருக்கிறார்கள்.

இப்படியாக கடும் போராட்டத்திற்கு பிறகு செந்தூரப்பாண்டி என்ற படம் விஜய் கதாநாயகனாக நடிக்க விஜயகாந்த் சிறப்பு தோற்றத்திலும் வெளிப்பட படம் வியாபார ரீதியாக வெற்றியை சந்தித்தது.

விஜயகாந்த் தக்க தருணத்தில் உதவியாக அந்த படத்தில் நடித்துக் கொடுத்தது, ரசிகர்கள் மத்தியில் ஒரு கவனத்தை ஈர்த்தது.

விஜயகாந்தின் ரசிகர்களும் பொதுமக்களும் விஜய்யை ஒரு நடிகராக ஏற்றுக் கொண்டார்கள் இதுவே சந்திரசேகர் அவர்களுக்கு ஒரு நிம்மதியை தந்தது.

செந்தூரப்பாண்டி வியாபார ரீதியாக வெற்றி பெற்றாலும் கூட விஜயை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை. இதை உணர்ந்த சந்திரசேகர் பெரும் சிரமத்திற்கு இடையில் மீண்டும் விஜய்யை வைத்து ரசிகன் என்ற படத்தை எடுத்தார்.

இந்த முறை அவர் வேறு ஒரு உத்தியைக் கையாண்டார். இளம் ரசிகர்களை குறிவைத்து படத்தை கிளாமராக எடுத்திருந்தார்.

இந்த உத்தி அவருக்கு வெற்றியை கொடுத்தது. இருப்பினும் சந்தையிலும் பொது ரசிகர் மத்தியிலும் கடும் விமர்சனத்தை பெற்றது.

இருப்பினும் அவரை வைத்து இயக்க எந்த இயக்குநரும் முன்வரவில்லை. திரும்பவும் விஜயை வைத்து தேவா என்ற படத்தை சந்திரசேகர் இயக்குகிறார்.

இந்த படமும் போதுமான வெற்றியை பெறவில்லை. ஆயினும் இதன் பின்னர் விஜய்யை வைத்து இயக்க, வெளியிலிருந்து ஒரு இயக்குநர் முன்வந்தார்.

ஜானகி சௌந்தர் என்ற அந்த இயக்குநர் விஜய்யையும் அஜித்தையும் வைத்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தை இயக்கினார். இளையதளபதி விஜய்யும் தல அஜித்தும் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். அந்த படமும் போதுமான வசூலை பெறவில்லை.

தொடர் தோல்விகள் இருந்தாலும், சற்றும் துவண்டுவிடாமல் தன் தந்தைக்கு உறுதுணையாக, வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்போடு கடும் உழைப்பை விஜய் செய்துகொண்டே இருந்தார்.

வரிசையாக தோல்வியை சந்தித்த படங்கள்

நடிகராக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதமாக சண்டைப் பயிற்சியில் கவனம் செலுத்துகிறார். மேலும் நடிகராக தனக்கு ஒரு தனித்தன்மை வேண்டும் என்பதை உணர்ந்த விஜய் கடும் நடனப் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சிறிது சிறிதாக அவர் நடனத்தில் நேர்த்தி கூடிக்கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தொழில்முறை மாஸ்டராக இருந்த பிரபுதேவாவுக்கு அடுத்தபடியாக, கதாநாயகர்கள் வரிசையில் நடனம் என்றால் விஜய் என்று ஒரு நிலையை அவர் எட்டிப் பிடித்தார்.

தந்தைக்கு சற்றும் குறையாமல் மன உறுதியுடன் அடுத்த முயற்சியில் இறங்குகிறார்கள், இந்த எஸ் ஏ சந்திரசேகர் ,விஜய் கூட்டணி அந்தப் படம்தான் விஷ்ணு. இந்த படமும் வெற்றியை பெறவில்லை.

சந்திரலேகா என்றவுடன் மிகப் பிரம்மாண்ட முரசின் மீது நடனமாடும் பாடலானது இலைமறை காய் போல தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருந்தது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி ஸ்டூடியோ நிறுவனர் எஸ்.எஸ். வாசன் தயாரித்து இயக்கி 1948ல் வெளிவந்த மிக பிரம்மாண்டமான படமான சந்திரலேகா படத்தின் தாக்கமானது இரண்டு தலைமுறைகள் கடந்தும் மக்கள் மத்தியில் இருந்தது.

அந்த படத்தின் தலைப்பை பயன்படுத்திக்கொண்டார் நம்பிராஜன். இவர்தான் விஜயை வைத்து சந்திரலேகா என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் மக்களிடம் கவனத்தை ஈர்க்கவில்லை.

வரிசையாக தோல்விகள் வந்த போதும் சற்றும் மனம் தளராமல் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டே வந்த விஜய்க்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியிருந்தது

அடுத்து வெளிவந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை ரசிகர்களுக்கான படமாக இருந்தது.

கடும் முயற்சிகளுக்குப் பிறகு, அன்றைய காலகட்டத்தில், மிகவும் பிரபலமாக இருந்த குடும்பப்பாங்கான படங்களை இயக்கும்,இயக்குநர் என்று பெயரெடுத்த விக்ரமன் பார்வை விஜய் மேல் விழுந்தது.

இதைத்தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிப்பில் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக என்ற படமே விஜய்க்கு ரசிகர்களை கடந்து மக்கள் மத்தியில் இப்படி ஒரு நடிகன் இருக்கிறான் என்ற ஒரு நல்ல பெயரை கொண்டு வந்தது.

வசந்த வாசல், காலமெல்லாம் காத்திருப்பேன், செல்வா என அடுத்தடுத்து வந்த படங்கள் பூவே உனக்காக என்ற படத்தின் வெற்றியை தாண்டி விஜய்க்கு மற்றுமொரு பிரம்மாண்ட வெற்றியைத் தரவில்லை.

ஒரு நடிகரின் திரைப்பயணத்தின், எண்ணிக்கையில் இது ஒரு படம் என்ற வரிசையிலேயே இந்த மூன்று படங்களும் இருந்தன. பூவே உனக்காக வெற்றியை தக்க வைத்துக் கொள்ள எஸ் ஏ சந்திரசேகர் விஜய் கூட்டணி திரும்பவும் இணைகிறது.

இந்தமுறை தன்னுடைய பழைய உத்தியான பிரபலமான ஒரு நடிகரை நடிக்க வைப்பது என்ற முடிவில் ஒரு கதையை உருவாக்குகிறார.

உலக தமிழர்களிடத்தில் நீங்கா இடம் பிடித்த நடிப்புச் சக்கரவர்த்தி, நடிப்பு திலகம் செவாலியர் சிவாஜி கணேசனின் உதவியை நாடுகிறார் அவரும் நடித்துத்தர சம்மதிக்கிறார்.

சிவாஜி கணேசன் சரோஜாதேவி இணைந்து நடித்த இந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.இந்த படத்தில் சிம்ரன் அறிமுகமாகி இருந்தார்.

சந்திரசேகர் எதிர்பார்த்த வெற்றியை ஒன்ஸ்மோர் படம் தந்திருந்தது. இது தொடர்ந்து நேருக்குநேர் என்ற படமும் வெற்றி பெற்றது. இந்த படத்தில்தான் சூர்யா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலுக்கு மரியாதை

இந்த இரு படங்களின் வெற்றியை தொடர்ந்து மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை என்ற படம் மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு தந்ததோடு, தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராகவும் மக்கள் மத்தியில் புகழ் பெறத் தொடங்கினார் இளைய தளபதி விஜய்.

காதலுக்கு மரியாதை திரைப்படம் இன்றளவும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.

நினைத்தேன் வந்தாய் ,ப்ரியமுடன், நிலாவே வா ,துள்ளாத மனமும் துள்ளும்காதல் ,நெஞ்சினிலே, மின்சார கண்ணா என வரிசையாக விஜய்க்கு ஏறுமுகம்தான்.

இதற்குப் பின் வெளிவந்த குஷி, ப்ரண்ட்ஸ், திருமலை ஆகிய படங்கள் இவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. இதற்குப்பின் கில்லி, போக்கிரி, அழகிய தமிழ் மகன் என தனது கடும் உழைப்பின் மூலம் விதைத்த பலனை அறுவடை செய்ய ஆரம்பித்தார் விஜய்.

ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படமும் ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படமும் இவரை இந்திய அளவில் கவனிக்க வைத்தது.

கத்தி ,தெறி ,மெர்சல் ,பிகில் , மாஸ்டர் என பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் விஜய்.

என்றென்றும் இளமை, காதல் , இயல்பான நடிப்பு ,நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் பாடகராக சகல துறைகளிலும் கை தேர்ந்த நடிகராக மிளிரும் விஜய்யின் இந்த பன்முகத்தன்மை அனைவரையும் இன்றளவும் வியக்கவைக்கிறது.

அரசு மற்றும் தனியார் திரைப்பட விருதுகளை வாரி குவித்து இருக்கும் இவர் ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேலாக கடும் உழைப்பினால் தமிழ் சினிமாவில் மாஸ்டராக வலம் வருகிறார்.

இளம் ரசிகர்கள் இன்றும் தலைவனாக ஏற்றுக் கொண்ட தளபதிதான் விஜய் ,கடந்த சில வருடங்களாக அரசியலுக்கு விஜயை ரசிகர்கள் அழைப்பது இன்றும் இந்த பிறந்த நாள் வரை தொடர்கிறது.

இன்று 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தளபதி விஜய், உச்ச நட்சத்திரமாக, வசூல் சக்ரவர்த்தியாக, அனைத்து வயதினருக்கும் பிடித்திருக்கும் நடிகனாக உயர்ந்திருக்கும் விஜய்யின் இந்த பயணம் எல்லா வெற்றிப் பயணங்களையும் தாண்டி அசாதாரணமானது.

என்றும் இளமையின் நாயகன் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கொண்டாட தொடங்கி விட்டார்கள்.

தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் உருவாக்கியுள்ள விஜயின் புகைப்படங்கள் விதவிதமான வடிவமைப்பில் விஜய்யின் சிறு வயது முதல் தற்போது வரை நடித்துள்ள திரைப்படங்களின் தொகுப்பை படங்களாகவும் ,அனிமேஷன் வடிவிலும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

இன்னும் பல தலைமுறை மக்களை மகிழ்விக்கும், கதாநாயகனாக வலம் வர இந்த பிறந்த நாளில் வாழ்த்துவோம்.