November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து; பிரதமர் மோடி ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவு 370 இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கை இந்திய மக்களை மட்டுமல்ல, உலக நாட்டுத் தலைவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அத்தோடு, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

ஜம்மு ,காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் எனவும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் எனவும், மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

தற்போது ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால்,மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது ,சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், எதிர்வரும் 24ஆம் திகதி டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 24 ஆம் திகதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.