July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உருமாறும் கொரோனா வைரஸ் 3 ஆவது அலையை தடுக்க தயாராக இருக்க வேண்டும்’; இந்திய பிரதமர் மோடி

இந்தியாவில் உருமாறும் கொரோனா வைரஸ் 3 ஆவது அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பல வடிவங்களில் உருமாற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த பிரதமர், அதனை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகளை எதிர்கொள்ள முன்கள பணியாளர்களுக்கு, தடுப்பு பணிகள் குறித்து பயிற்சி வழங்கும் தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, கொரோனா வைரஸ் கண்டிப்பாக உருமாற பல வாய்ப்புகள் உள்ளது. வேகமாக உருமாறி புதிய சவால்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவை,தடுக்க தயாராக வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், சனத்தொகை அதிகமாக கொண்ட இந்தியாவில் அவர்களுக்கான சேவைகளை வழங்க மருத்துவர்கள் போராடி வரும் நிலையில்,அவர்களுக்கு உதவியாக முன்கள பணியாளர்களையும் தயார் செய்து வருகிறது மத்திய அரசு.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், ஒரு இலட்சம் முன்களப் பணியாளர்களை தயார்படுத்தி வருவதாக மோடி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

இருந்த போதிலும் பிரதமர் உள்ளிட்ட மருத்துவர்கள் மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறார்கள்.