தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 14 ஆம் திகதி அன்று 164.87 கோடி ரூபாய்க்கும், 15 ஆம் திகதி 127.09 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கிறது இந்நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் குடிமகன்களின் கூட்டம் மதுபானக் கடைகளில் அலைமோதுகிறது.அதிலும் கடந்த இரு தினங்களில் மதுபானங்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளன.காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மதுபான கடைகள் திறக்கப்படாத அயல் மாவட்டங்களில் உள்ள குடிமகன்கள் திறக்கப்பட்டுள்ள மாவட்டங்களை நோக்கி படை எடுத்திருக்கிறார்கள் .
இதனால் கொரோனா விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளையும் மீறி டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.இந்நிலையில் இரண்டு நாட்களில் மட்டும் 291.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அதிகமாக விற்பனையாகி உள்ள பகுதிகளை பார்த்தோம் என்றால், மதுரையில் 14 ஆம் திகதி 49.96 கோடிக்கும், 15 ஆம் திகதி 37.28 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.சென்னையில் 14 ஆம் திகதி 42.96 கோடிக்கும்,15 ஆம் திகதி 33.41 கோடிக்கும் விற்பனை ஆகியிருக்கிறது.திருச்சியில் 14 ஆம் திகதி 33.65 கோடிக்கும் 15 ஆம் திகதி 27.64 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.
இவ்வாறு திறக்கப்பட்ட 27 மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன.முக்கியமாக தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் பெரும் பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் தான்.
அதனால் பல கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி மது கடைகள் ஊரடங்கு காலத்திலும் திறக்கப்பட்டுள்ளன.