(file photo)
இலங்கையில் இருந்து ஆயுதக்குழு ஒன்று தமிழகத்திற்கு ஊடுருவ முயற்சித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தமிழக பொலிஸார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தமது கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
ஆயுதமேந்திய ஒரு குழு படகொன்றில் ராமேஸ்வரம் கடற்கரையை நோக்கி சென்றதாக கேரள காவல்துறையின் புலனாய்வுத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சனிக்கிழமை மாலை இந்திய மத்திய புலனாய்வு பிரிவால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் அத்துடன் சென்னை ஆகிய நகரங்களிலும் தமிழக பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு, தமிழ்நாடு கடற்கரையை அடையும் முயற்சிகளை முறியடிக்க கடலோர காவல்படையினரால் கடலில் அதிக கப்பல்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் இவ்வாறு தமிழகத்திற்கு ஊடுருவ முயற்சித்தவர்கள் குறித்த சரியான அடையாளம் மற்றும் அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது போன்ற விபரங்கள் இல்லை என உளவுத்துறை தரப்புகள் ஐ.ஏ.என்.எஸ்.ஸிடம் தெரிவித்துள்ளன.