January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புடன் போராட வேண்டும்; ஜி7 மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

கொரோனாவை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புடன் போராட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி-7 மாநாட்டில் காணொளி வாயிலாக உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என்ற மையக் கருத்தை முன்வைத்த பிரதமர், ஆரோக்கிய மேம்பாடு குறித்த தனது கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் கொரோனா தொற்றை வெற்றிகரமாக இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக அரசு, தொழில்துறையினர், பொது மக்கள் என ஒட்டு மொத்த சமூகமும் போராடிக் கொண்டுள்ளது.

இது போன்ற பெருந்தொற்றுகள் வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உலகளாவிய ஒற்றுமை, தலைமை ஆகியவற்றால் எதிர்காலத்தில் பெருந்தொற்றுகள் வருவதை தடுக்க முடியும் என்றும் சவால்களை எதிர்கொள்ள ஜனநாயக மற்றும் வெளிப்படையான சமூகங்களிடைய சிறப்பு பொறுப்புணர்வு இருக்க வேண்டியதை பிரதமர் மோடி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஜி-7 மாநாட்டில் இந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளதுடன், கொரோனா காலகட்டத்தில் வலிமையான ஆரோக்கிய கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.