ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைதாகி இன்றுடன் (11) முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எழுவர் விடுதலையையும் தமிழக முதலமைச்சர் வேகப்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை அறிவித்தும், அவரை விடுதலை செய்யும் விடயத்தில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடுவது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 7 தமிழர்கள் விடுதலை குறித்து 2018 செப்டம்பர் 09 ஆம் திகதியன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என ஆளுநருக்கு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி, நேரிலும் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தமிழக அரசின் சார்பில் வாதிடுவதற்கு மனித உரிமைகளில் அக்கறை கொண்ட திறமையான மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
அதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சிறை சென்ற மகன் பேரறிவாளன் விடுதலையாகி வீடு திரும்புவதை கண்டு அவரது வயது முதிர்ந்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமது அறிக்கை வாயிலாக தமிழக அரசை ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநிலத் தன்னாட்சிக்கு உயிரூட்ட, 161வது சட்டப்பிரிவின்படி உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றி, எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும்!#31YearsOfInjustice#StandWithArputhamAmmal pic.twitter.com/GFgTHkuETN
— சீமான் (@SeemanOfficial) June 11, 2021
இதேவேளை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘அறிஞர் அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படும் மாநில தன்னாட்சிக்கு உயிரூட்ட, 161 வது சட்டப்பிரிவின்படி உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி, எழுவர் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்த வேண்டும் எனவு கேட்டுக்கொண்டுள்ளார்.