January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலவச தடுப்பூசி: மோடியின் தாமதமான முடிவால் பல உயிர்கள் பறிபோனது; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்ற  மோடியின் தாமதமான முடிவால் பலரது உயிர்களை ஏற்கனவே இழந்துவிட்டோம்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

அத்தோடு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க, இந்தியாவில் உள்ள மாநில அரசாங்கங்கள் தீவிரமாக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஆங்காங்கு நிலவி வந்தாலும் கூட, இதுநாள் வரை மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விலைக்கு வழங்கி வந்தது.

சில மாநிலங்கள் நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டனர்.

இருப்பினும் அவ்வாறு நேரடியாக கொள்முதல் செய்வதற்கு நடைமுறை சிக்கல்கள் இருந்ததனால் பிரதமர் மோடிக்கு மாநில முதல்வர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், தடுப்பூசிகளை மொத்தமாக மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்கள் அனைத்திற்கும் இலவசமாக வழங்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பல மாநில முதல்வர்கள் நன்றி தெரிவித்து இருக்கிறார்கள். இருப்பினும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விடயம் குறித்து தனது டுவிட்டர் தளத்தில்,

‘இதைத்தான் நாங்கள் நான்கு மாதங்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பிரதமர் தாமதமாக முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாக நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று பெப்ரவரி மாதம் முதல் பலமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன்.

ஆனால் மாநில அரசுகளிடம் இருந்து மிகுந்த அழுத்தம் வந்த பிறகு தற்போதுதான் அவர் அமுல்படுத்தியுள்ளார் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.