கூகுள் தேடலில் கன்னட மொழியை மோசமான மொழி எனக் காட்டியதற்காக, கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இந்தியாவில் மோசமான மொழி எது? என்று கூகுளில் ஆங்கிலத்தில் தேடும்போது கன்னட மொழியை கூகுள் காண்பித்துள்ளது.
உணர்வுமயமான மொழிப்பற்று நிறைந்த கர்நாடக மக்களை இது மிகவும் கொதிப்படையச் செய்ததுடன் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இது தொடர்பில் கர்நாடக மாநில கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனத்தை தெரிவித்திருந்ததோடு இதுகுறித்து கூகுளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்நிலையில் கன்னட மொழி இந்தியாவின் மோசமான மொழி என்ற கருத்து கூகுளுடைய கருத்து அல்ல தேடுதல் பொறியில் இம்மாதிரி விடயங்கள் எதிர்பாராமல் நடக்கிறது என கூகுள் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட அனைவரிடமும் இந்த சம்பவத்திற்காக கூகுள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு கூகுள் தேடுபொறியில் உள்ள கன்னட மொழி சார்ந்த தவறான தகவல்கள் அனைத்தும் நீக்கி உள்ளோம் என்று கூகுள் கூறியுள்ளதுடன், அதன் டுவிட்டர் பக்கத்தில், மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்புக் கோருகிறோம் எனவும் கூகுள் நிறுவனத்தினர் பதிவிட்டுள்ளனர்.
— Google India (@GoogleIndia) June 3, 2021