January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தை பாதுகாப்பதே திமுக அரசின் முதல்வேலை;முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

பிபிஇ கிட் கவச உடை அணிந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரடியாக பார்த்ததாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தை பாதுகாப்பது தான் தனது முதல் வேலை என முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கொரோனா கவச உடை அணிவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும் எனக் கூறியுள்ள முதலமைச்சர், அதனை அணிந்து டாக்டர்கள், நர்சுகள் வேலை பார்ப்பது பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.

அவர்களுக்கு நம்பிக்கை, உற்சாகத்தை ஊட்ட வேண்டும் என்பதற்காகவே அந்த உடையை அணிந்து தான் ஆய்வை மேற்கொண்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்,கர்நாடகாவில் 50 ஆயிரம், கேரளாவில் 43 ஆயிரம் என்ற உச்ச நிலையை தொட்டுள்ளதாகவும் ஆனால் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் தற்போது குறைந்துள்ளதாகவும்,மற்ற மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

கொவிட் தொற்று சென்னையை விட கோயம்புத்தூரில் அதிகரித்து இருந்ததாகவும் அரசின் நடவடிக்கையால், கடந்த 2 நாட்களாக கோவையில் சற்று குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கோயம்புத்தூரில் தொழில் நிறுவனங்கள் அதிகம் போன்ற காரணங்களால் கொரோனா தொற்று அதிகரித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கூறிய முதலமைச்சர் கிராமங்களில் பரவலை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

பல்வேறு இடங்களில் தற்காலிக சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் ஒக்ஸிஜன், படுக்கை தட்டுப்பாடு இல்லை என செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

1.07 லட்சம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது என கூறியுள்ளார்.

பொது மக்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தலில் வாக்கு போடாத மக்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ள முதலமைச்சர்,கோவையை திமுக அரசு புறக்கணிக்கவில்லை என குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.